12/30/2015

உன் முத்த துகள்கள்

உன் முத்த துகள்கள் 
என் சட்டைப்பைக்குள் 
எட்டிப்பார்க்க 

ஒரு முத்தம் வாங்க 
கஷ்டப்பட்டதை 
எண்ணிவேர்க்க 

மிச்சம் வைத்த 
முத்ததுகள்களை 
பொத்திவைத்து 

நான் 
கொஞ்சம் கொஞ்சமாக 
அனுபவிக்கிறேன் 
உந்தன் நினைப்பில்

9/21/2015

இலக்கணம் இல்லா இரவுகளில்

அச்சடித்த புத்தகத்தில்
பச்சை குத்திய என்இதயம்

பார்த்தவுடன் கவர்வதில்
அட்டைப்படம் உன்வர்க்கம் 

பக்கம் தட்டும் விரல்களில்
ஏங்கவைக்கும் உன் எண்ணம்

வளைந்தோடும் இடைவரியில்
விரிந்து கிடக்கும் கதையம்சம் 

விமர்சனம் இல்லா பார்வையில்
முகவுரை சொல்லும் முத்தம்

இலக்கணம் இல்லா இரவுகளில்
இலக்கியம் படைத்திடும் என்விருப்பம்

வீட்டுக்கு அழகு பெண்ணிடம்

ஒரு சொட்டு நீர்த்துளி
உன் ஈரக்கூந்தலில் இருந்து
என் நெற்றிபொட்டில் பட்டுத்தெறிக்க
சோம்பலை முறித்து
கண்விழித்து பார்க்க
வட்ட பொட்டு உன் நெற்றியில்
வண்ணமாய் ஜொலிக்க
தாலிக்கயிறு கழுத்திலே 
வட்டமாய் நெளிய
ஈரத்துணியினால்
கூந்தல் சுற்றிகட்டி
கழுத்திலே
மிச்ச குங்குமத்தை ஒற்றி
உதட்டிலே
சிரிப்பை மட்டுமே வைத்து
காதில் பிடித்துதிருகி
காலை வணக்கம்
சொல்லும்போதே
தோற்றுவிட்டேன் உன்னுடன்
வீட்டுக்கு அழகு பெண்ணிடம்

9/18/2015

வாடிக்கையான விடுமுறை

வளைந்தோடும் வீதியில் 
நெடுந்தூர பயணம் 
மகிழ்ந்தூரில் அவளும் 
அழகான பாடலும்

சிலிர்க்கின்ற தேகமும் 
சிரித்துகொண்டே காதலும் 
நினைக்காத நேரத்தில் 
நெஞ்சிலிலே அவள் ஸ்பரிசமும்

இசைகேற்ற தலையசைவும் 
மலைகளிலே மர அசைவும்
மனசினிலே சிறகடிக்கும் 
விடுமுறை நாள் விருந்தளிப்பும்

ஓரக்கண் பார்வைகளும் 
வீதி சமிஞ்சை குளம்புவதும்
விபத்து நடக்க வழியிருந்தும்
வீதி ஒழுங்கை நினைப்பதும்

மாட்டி கொண்ட இதையங்கள் 
மகிழ்வுடனே பறப்பதும் 
காவல்துறையை கண்டதும் 
நல்லவர் போல் நடிப்பதும்

மாதமொரு விடுமுறையால் 
மகிழ்ச்சியிலே திளைப்பதும்
மகிழ்ச்சியில் திளைத்ததை 
அடுத்த மாதம்வரை நினைப்பதும்

அவசர உலக வாழ்கையிலே 
வாடிக்கையான விடுமுறையே

9/16/2015

மாலை சூடும் நேரம்வரைக்கும்

நிமிடம்தோறும் உந்தன்நினைப்பு
நினைத்து நினைத்து எனக்குள்சிரிப்பு
பட்டாம் பூச்சி இதயத்துடிப்பு
பார்க்க துடிக்கும் அன்பின் அணைப்பு

கிட்ட வந்தால் வெட்க்கப்படுவேன்
எட்ட சென்றால் ஏங்கி தவிப்பேன்
மூச்சு முட்ட காதல் கொள்வேன்
சொல்ல முடியாமல் குழம்பி நிப்பேன்

கண்ணை பார்க்காதே நாணம் கொள்வேன்
கண்ணால் பார்க்காதேஉருகி வடிவேன்
கட்டி பிடிக்காதே தேகம் குழைவேன்
கரைகள் படியாமல் காத்து கிடப்பேன்

மாலை சூடும் நேரம்வரைக்கும்
மணவறைக்கோளம் காணும்வரைக்கும்
விடுமுறை இல்லா வெட்கம் கொள்வேன்
விரும்பியே உன்னை தள்ளிவைப்பேன்

9/14/2015

விழுந்துவிட்டேன் காதலில்

நீ 
வீதியை கடக்கமுன்பே 
நான் 
விழுந்துவிட்டேன் காதலில்

9/11/2015

மொட்டை போட்டுவிட்டாய்


கூந்தல்
கலைத்து விளையாடும்
தென்றல் காற்றாய் - உன்
பின்னாலே வந்தேன்

நீ

கூந்தலே வேண்டாமென்று
வெட்டிவிட்டாய்
என் காதலுக்கு
மொட்டை போட்டுவிட்டாய்

9/10/2015

நதியா

நதியா 
இடையா 
நெளிகிறதே 
தனியா


9/09/2015

வெட்க்கமின்றியே பறக்கிறேன்

விடுமுறை நாள் 
அதிகாலை
துயில் கொள்ளும் 
கட்டிலின் மேலே
இரு கைகளுக்குள் - நீ 
குழந்தைபோல 

வெட்கப்பட்டு சிரிக்கிறாய் - நான் 
வெட்க்கமின்றியே பறக்கிறேன்

9/08/2015

என் நெஞ்சில்

முட்டாமல் கிட்ட வந்து 
முத்தங்கள் நூறு தந்து 
நிற்காமல் போகும் தென்றலாய்
*****
என்னையும் பார்க்காமல் 
என் கண்ணையும் பார்க்காமல் 
மண்ணையே பார்க்கும் வெக்கமாய் 
******
சொன்னதும் கேக்காமல் 
கேட்டதும் சொல்லாமல் 
பெண்ணென நெளியும் ஓடையாய் 
*****
மெல்லவும் முடியாமல் 
தின்னவும் முடியாமல் 
காதல் நெஞ்சில் சிக்கலாய் 
****
தப்பவும் முடியாமல் 
தப்பிக்கவும் நினைக்காமல் 
கையைகட்டி நிக்கிறாய் 

என் நெஞ்சில் 

9/07/2015

யாயும் ஞாயும் யாராகியரோ

வழி அனுப்பிவிட்டு 
வாசலில் விழிகரைந்து 
நிற்பதும் 

வாசல் வரும்முன்னே 
ஆயிரம் முத்தங்கள் 
தருவதும் 

உயிர் உள்ளிருந்து 
வெளியில் செல்வதுபோல்
நினைப்பதும் 

அனுப்பி விட்டு 
நினைவு தோட்டத்தில் 
மலர் பறிப்பதும் 

அப்பப்ப சிரிப்பதும் 
அழகான படங்கள் எடுத்து 
பார்ப்பதும் 

அலை பேசியில் 
நொடிக்கொரு முறை 
தகவல்கள் சொல்வதும் 

வீடு திரும்பும் வேளை 
ஓடிவந்து கட்டி 
அணைப்பதும் 

குட்டி பூனைபோல் 
என் கால்களுக்குள்ளே 
நிற்பதும் 

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

9/04/2015

என் காலை உணவு

மூன்று செத்தல் மிளகாய் 
நான்கு சின்ன வெங்காயம் 
ஐந்து தேங்காய் சொட்டு 
ஆறு கருவப்பிள்ளை 
கொஞ்சம் உப்புவைச்சு 
அம்மியில் அரைச்ச சம்பல்போல 
சிவந்திருக்கும் உன் சொண்டை 
கடித்துக்கொண்டே முடிக்கவா 
என் காலை உணவை

9/03/2015

இதயத்தில்

தழுவும் தாவணியில்
தவறிவிழுந்த இதயத்தை
வெட்கப்பட முன்னே
ஏந்திவிட்டேன் - என்
இதயத்தில்
.....
தழுவிய தாவணியை
தலைகுனிந்தே அள்ளியெடுத்து 
குழந்தை போல்
நெஞ்சிலே போட்டபோது
நானும் உன் இதயத்துக்குள்

9/02/2015

கோவில் கதவு

ஆறுகால பூசையில்லா 
காதல் கோவில் 
பாத கொலுசு 
பூஜை மணியாக 
முத்த துகள்கள் 
தீர்த்த துளியாக
அள்ளிகொடுக்கும் ஆண்டவனாய் 
நீ 
அள்ளி எடுக்கும் பக்தனாய் 
நான்
கோவில் கதவு 
எப்பொழுதும் பூட்டுதான்

9/01/2015

காலைப்பொழுதுகளெல்லாம்

நீ
நீராடிய பின்
தீர்த்தமாடும்
உன் கூந்தல் முடியில்
ஒரு சொட்டு நீர்த்துளி
என் கன்னத்தில் பட்டு
நான் துயில் எழும்பும்
காலைப்பொழுதுகளெல்லாம் 
உனக்கு மறுகுளியல்தான்

8/31/2015

நதி ஒன்று சேலைக்குள்

நதி ஒன்று 
சேலைக்குள் 
நெளிகிறது வளைகிறது 
என் இதயமும் இரு விழிகளும்
தென்றல் உரசிடும் 
தேகத்தை மறைத்திடும் 
சேலைக்குள் 
வெட்கத்தின் குவியலாய் 
என் காதல்
பறக்கின்ற தாவணியில் 
சிலிர்க்கின்ற தேகத்தில் 
ரகசியம்தேடும் காற்றுடன் 
நானும் சேர
வளைகின்றது நதியாய் 
சேலை தேகத்தில்
நெளிகின்றது இடை 
இடைவிடா போரட்டத்தில்
நடைமட்டும் காட்டி 
கொடுத்துவிட்டது - என் 
காதலை

8/28/2015

சந்தோசத்தில் பயணிக்கிறேன்

மேனியை தொட்டும் தொடாமலும் 
பட்டுச்செல்லும் இதமான 
இனிய காலைப்பொழுதில்தான்
என் தேவதைக்கான நேரம் 
குறிக்கபட்டிருந்தது

என்ன சந்தோசம் 
குயில்களும் குட்டி குருவிகளும் 
மலர்களும் வஞ்சனை இல்லாமல் 
முகத்தை மலர்ந்தே வைத்திருந்தன 
பேருந்து தரிப்பிடத்தில் 
தனியாகத்தான் காத்திருந்தேன் 
அனாலும் நான் 
தடக்கி விழுந்துவிட்டேன்

சில்லென்ற மெல்லிய காற்று 
முகவுரை வாசிக்கும்போதும் 
நான் கேட்க்கவில்லை 
பரவாயில்லை என் நெஞ்சுக்குள் 
நீ முழு உரையையும் வாசித்துவிட்டாய் 
இதுவரை என் மனதினில் 
தோன்றாத வரிகளை தோன்றவைத்தாய்

நீ அழகிதான் இருந்தாலும் 
மலர்களும் முழு நிலவும் உன்னுடன் 
போட்டி போட்டு நிக்கின்றன 
இருந்தும் உன் சிரிப்பால் 
அனைத்தையும் கொள்ளையடித்துவிடுகிறாய் 
அது போதும் எனக்கு 
நான் ஆனந்தப்பட 
இருந்தாலும் திமிர்பிடித்த 
உன் கூந்தல்கள் 
அங்கும் இங்கும் ஆடும்போது 
எனக்கு நெஞ்சுக்குள் பயம்தானடி 

பேரூந்தும் வந்துவிட்டது 
இன்றும் நான் மௌனித்த நினைவுடனே 
ஆனாலும் போராடாமல் 
உன் பார்வை ஒன்று கிடைத்த 
சந்தோசத்தில் பயணிக்கிறேன்

8/26/2015

தவிக்காமல் தவிக்கின்றேன்

விழுந்து தெறிக்கும் மழைத்துளியில் 
எழும்பி குதிக்கும் நீர்த்துளியாய் - உனை 
நினைத்து துடிக்கும் என் இதயம் 

குடை கொண்டுவந்து 
காகித படகொன்றுவிடும் 
குட்டி குழந்தையைப்போல் என் காதல் 

இலைகள் வருடி இதமாய் ஒழுகி 
மலர்களில் முட்டும்மழைத்துளியாய் 
என் உள்ளம் 

சிறு எறும்பு ஒன்று ஊர்ந்து 
காய்ந்த நிலமொன்றை தேடும் 
நீண்ட பயணம் போல் 
என் பார்வை 

நீ நனைந்திட்ட மலராய் 
தலை குனிந்திட்டபடியே 
மின்னுகின்றாய் கண்களாலே 

இடி இடிக்காத குறையாய் 
இதயத்தில் வெடிக்க 
தலை துவட்டாமல் திரிகிறாய் 
மழை நாளில் 

நிலை கம்பிகள் தடுக்க 
யன்னலின் பின்னால 
உனை ரசிக்கின்றேன் தேவி


தேவி ஸ்ரீ தேவி 
உந்திருவாய் மலர்ந்தொரு 
வார்த்தை சொல்லிவிடமா 
ஒலிக்காமல் ஒலிக்கின்றது 
மனதில் 

நான் தவிக்காமல் தவிக்கின்றேன் 
தனி அறையில்

வரவுக்காய் காத்திருக்கும் காதலி

மணமோடு குணம்தரும் 
சமையலறையில் – உனை 
விருந்தோம்பி சுவைகான 
தேடுகின்றேன் 

மலரோடு மணம்தரும் 
சாமியறையில் – உனை 
மணவாளக்கோலத்தில் 
தேடுகின்றேன் 

உடலோடு நீர்தழுவும் 
குளியலறையில் – எனை 
உடையோடு நீபார்க்க 
வேண்டுகின்றேன் 

உடைமாற்றி துயில்கொள்ளும் 
துயிலறையில் – எனை 
தூங்காமல் தாங்கிநிக்கும் 
தாயக தேடுகின்றேன் 

வந்தோரை வரவேற்க்கும் 
வருகை அறையில் – உன்
வரவுக்காய் காத்திருக்கும் 
கதிரையாகிறேன்

8/24/2015

இப்படிக்கு இதயம்

உயிராக காத்திருக்கும் 
காதலுக்காய் 
உயிர்விட காத்திருக்கிறேன் 

இப்படிக்கு இதயம் 
எழுதிக்கொள்வது ஏமாற்றத்துக்கு

8/21/2015

காதலுடன்நீண்ட இரவுகளில்
எண்ணி முடிக்காத நட்சத்திரங்கள் போல் 
என் நினைவுகளும்

ஒற்றை நிலவுதான் அழகு
அதில் பட்ட கனவுகள் நூறு

வெட்ட வெளிதான் வானம்- அதில் 
சிறகடித்து பறக்கும் காதல்

காற்று வீசுது தென்றலாய் -என் 
சிறகுகள்மட்டும் அடிக்குது புயலாய்

சின்னஞ்சிறு இதயம்தான் எனக்கும் - அதில் 
உன்னைத்தவிர வேறென்ன இருக்கும்

எண்ணிமுடிக்காத நச்சதிரங்களிடையே - நான் 
எரிகல்லாய் சாம்பலகின்றேன் 
காதலுடன்

8/19/2015

நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

கண்மூடிய இரவுகளில் 
உன் கைஅரவணைப்பில் 
நான் தூங்க
மூசுகாற்று முட்டித்தெறிக்க 
முழு உடலும் உனை தழுவ
நெஞ்சினிலே வீணி வடிந்தோட
திடுக்கிட்டு நான் எழும்பும் நேரத்திலும்
இரவிரவாய் வாய் புசத்தும் நேரத்திலும்
தலையை தடவி தூங்கவைக்கும் 
உனை நம்பி 
நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

8/17/2015

முதமில்லாமல் மிச்சமில்லை

தென்றல் இல்லாமல் 
தீண்டல் இல்லை 
தீண்ட தெரியாமல் 
காதல் இல்லை
கண்கள் இல்லாமல் 
பார்வை இல்லை 
பார்க்கதெரியாமல் 
பாவை இல்லை
பெண்மை இல்லாமல் 
மோகமில்லை 
மோததெரியாமல் 
காமம் இல்லை
கொஞ்ச தெரியாமல் 
முத்தம் இல்லை 
முதமில்லாமல் 
மிச்சமில்லை
ஹா ஹா ஹா

8/14/2015

கலைந்தது காதல்

பிறக்கமுன் இறக்கும்
குழந்தையை போல 
நினைக்கமுன்பே கலைந்தது
காதல்

கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

நெஞ்சம் முழுக்க உன்னை நினைத்து 
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் 
கண்கள் மூட மறுக்கிறது
கனவு என்னை கலைக்கிறது
செங்கமல இதழ்விரித்து
சொல்லுகின்ற வார்த்தை ஒன்றை 
கண்கள் தேடி அலைகிறது – இது 
காதல் என்று புரிகிறது
பிஞ்சு விரல்கள் பட்டதுமே 
அஞ்சி சுருங்கும் இடை எனது 
உன் பத்து விரல் படுவதற்காய் 
பாய்விரித்து கிடக்கிறது
கொஞ்ச நேரம் என்னைப்பார்த்து
கொஞ்சி குலாவ நேரம் ஒதுக்கு 
உந்தன் இதய கோவில் வாழும் 
தெய்வமன்றோ நான் உனக்கு
சிவனும் சக்தியும் இமையமலையில் 
அர்த்தனா தீஸ்வரராய் உந்தன் மடியில் 
கற்ற வித்தை மொத்தம் இறக்கு 
கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

8/12/2015

என் காதலுக்காக

சில்லறை தெளித்தது போல்
மெல்லிய மழைத்துளி
பேரூந்தின் யன்னனில்
பட்டுத்தெறிக்க

அவசரத்தில் ஏறி
உனக்கென்றொரு இடம்பிடித்திருந்து
கண்ணுக்கு மை பூசுகின்றாய்
தோகை மயிலாய்
விரிகின்ற உன் கூந்தல்
என் முகத்தில் படுவது தெரியாமல்

அழகாக்குகின்றாய் உன்னை
பேரூந்தில் பின்னால் வருவது
நான் என்று தெரியாமல்

சொல்லிவிடு உலக அழகு
அத்தனையும் கொட்டிவிடுகிறேன்
உன் காலடியில்
என் காதலுக்காக

8/10/2015

இன்னும் நான் உன் நினைப்பினிலே

பனிவிழும் இரவினில்
தனி ஒரு கதிரையில் 
கறுத்த கோப்பி கோப்பையில்
என் நெஞ்சம் முழுக்க
உன் நினைப்பினிலே
களைத்து விழுந்து வீடு வந்து
உடைகள் களைந்து
குளித்து எழுந்து
தலையை துவட்டும் போதும் - நான்
உன் நினைப்பினிலே
பகல் முழுக்க வேலை செய்து
இடைவேளையில் உணவு உண்டு
கை விரலை கழுவும் போதும்
உன் கைபிடித்து இன்னும்
என் நினைப்பினிலே
சின்ன சின்ன சிரிப்பொலிகள்
நெஞ்சினிலே கிச்சு கிச்சு மூட்ட
சோம்பல் முறிந்து விழுந்த என்னை
தூக்கிவிட்டு வணக்கம் சொன்னது
இன்னும் என் நினைப்பினிலே
நினைக்கின்ற நேரமெல்லாம்
சிரிக்கின்றாய் நெஞ்சினிலே
சிரிக்கின்ற நேரமெல்லாம்
நினைக்கின்றேன் நெஞ்சினிலே
இன்னும் நான் உன் நினைப்பினிலே

8/07/2015

காதல்

காதல் 

தெரியாத இருவர் 
புரியாமலும் 
புரிந்தும் 
பிரியாமல் 
இருப்பது

8/05/2015

உறவு

இறைவனால் உருவாக்கப்பட்ட 
இயந்திரம் 
இரவு பகலாய் உழைக்கும் 
மனித இனம் 
அன்பு பாசம் எல்லாம் 
இரண்டாம் இடம் 
காசு ஒன்றே கடவுளைவிட 
முதல் இடம் 
இறுதியாக போவது 
மேல் இடம் – அப்பொழுது
தேடுவோம் அன்பை 
உறவுகளிடம்

8/03/2015

முத்தம்


அச்சடித்தது போல்
அடுக்கி வைத்த
பல் வரிசை

அழகாக சிரிக்கையில்

மனசெல்லாம்
இச்சை இச்சை

வெட்கபட்டு

நிக்கையில் நீ
செல்ல குழந்தை

கட்டிவைத்து தருவேன்

முத்தம்
பச்சை பச்சை

7/31/2015

அம்மா அப்பா

செவ்வாய் வியாழன் வெள்ளி
அம்மா விரதம் இருப்பது
செலவை குறைக்கத்தான் என்று
தெரியவில்லை

பள்ளி உடுப்பை மட்டும்
வெளியில் கொடுத்து வெளுப்பது
அழகுகன்றி படிப்புக்குதான் என்று
தெரியவில்லை

அடுத்த திபாவளிக்கு தான் இனி
புது உடுப்பு என்றபோது
அப்பா காசை சேமிக்கிறார் என்று
தெரியவில்லை

எதனை பலூன் என்று கேக்காமல்
எந்த பலூன் வேண்டும் என்று
கேக்கும்போது ஒளிந்திருக்கும் வறுமை
தெரியவில்லை

உடம்புக்கு முடியல திருவிழாக்கு
நான் வரல என்றபோது - அம்மாக்கு
சேலைவாங்க காசில்லை என்பது
தெரியவில்லை

ஒன்றுமே தெரியாமல்
அப்பாக்கும் அம்மாக்கும்
ஒன்றுமே தெரியாதென்று
நண்பர்களிடம் சொன்னபோதும்
ஒன்றுமே தெரியாததுபோல்
இருவரும் இருந்ததும்
தெரியவில்லை

கஷ்டபட்டு உளைச்ச
முதல் சம்பளத்தில்
அம்மாக்கும் அப்பாக்கும்
பார்த்து பார்த்து
உடுப்பு வாங்கும்போது

எல்லாமே புரிகிறது

7/30/2015

அன்பு

தேவை கொண்டு 
பழகும் உள்ளம் 
தேவைமுடிய 
விலகிப்போகும்

அன்பு கொண்டு
பழகும் உள்ளம்
பேசாவிடினும் 
மனதில் நினைக்கும்

7/29/2015

ஆயுள் வரை துடிக்குதடி

சீவி வைத்த அப்பிள்தோல்போல்
மேனி முழுக்க மினுங்குதடி
உரித்து வைத்த உள்ளியைப்போல்
கண்கள் இரண்டும் சிமிட்டுதடி

கடித்து வைத்த மிளகாய்போல்
உதடு இரண்டும் சிவக்குதடி
இழுத்து வைத்து முத்தமிட்டாலும் 
உறைக்கவில்லை இனிக்குதடி

அவித்து வைத்த அரிசியைப்போல்
ஆவி எழும்பி பறக்குதடி
இறக்குவித்த குழம்பை போல்
இதயம் ஏனோ கொதிக்குதடி

பொரித்து வைத்த அப்பளம்ப்போல்
வார்த்தை எல்லாம் நொருங்குதடி
குழைத்து நான் தின்றாலும்
உறைக்கவில்லை இனிக்குதடி

கழுவிவைத்த கோப்பையைப்போல்
கைகள் இரண்டும் குளிருதடி
பெருக்கி எடுத்த குப்பையைப்போல்
மூச்சு காற்று பறக்குதடி

துடைத்து வைத்த மேசையைப்போல்
இடை நெளிந்து சிரிக்குதடி - உனை
அணைத்தெடுத்து ஆட்கொள்ள - உயிர்
ஆயுள் வரை துடிக்குதடி

7/27/2015

ஒரு தாய் மடி கொடு

கவலை
எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றமானபின்பு
எதிர்பர்காமலேயே வருகிறாயே
தேவையானவர்கள்
காயப்படுத்தியபின்பு
தேவை இல்லாமலே வருகிறாயே
விருப்பமானவர்கள்
வெறுக்கின்றபோது - நான்
விரும்பாமலேயே வருகிறாயே
காயங்கள் வந்தாலும்
ஏமாற்றம் நடந்தாலும்
சிரிக்க வேண்டும் நான்
கவலையே இலவச கவலையே
தேவை இல்லை நீ போய்விடு
இறைவா என் கவலை தீர்க்க
ஒரு தாய் மடி கொடு

7/23/2015

அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

வீடு மேலே கூடு கட்டி
கூடுக்குள்ளே குஞ்சு பொரிச்சு
பாசத்துடன் வளர்த்துவரும்
குருவிபோல இருந்த வாழ்க்கை

கூடு உடைஞ்சு குருவிபறந்து
தேசமெங்கும் சிதறி வாழ்ந்து
பாசத்துக்கை ஏங்கி தவிக்கும்
தனிமை குயில் ஆனதேனோ

சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளே
சில்லறையாய் நாலு அரிசியுடனெ
கஞ்சி குடித்து வாழ்ந்த காலம்
பஞ்சு மெத்தையில் கிடைத்திடுமோ

சொந்த மண்ணில் முள்ளு வேலி
சொந்தங்களுக்குள் சண்டை போட்டி
சொந்தமாக வீடிருந்தும்
அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

7/20/2015

என் விடிவு உந்தன் கைகளிலே

நிமிட முள்ளு குத்துதடி
உனக்காக காத்திருக்கும்வேளையிலே

தொலைபேசிக்கே வலிக்குதடி
உன் குறுந்தகவல் காணும்வரை

விடியும்வரை காத்திருக்கிறேன்
நிலவு கூட மறையுதடி

நான் சிரிக்காமல் இருப்பது
நீ செய்த வேலையடி

கனவு கூட கண்டுவிட்டேன்
கண் இமைக்கா வேளையிலே

காதல் மட்டும் கூடவில்லை
நான் என்ன செய்வேன் காதலியே

விடைகூட சொல்லவில்லை - நீ
விரும்புகிறாயா என்றும் தெரியவில்லை

இரவுடனே களிக்கின்றேன்
என் விடிவு உந்தன் கைகளிலே

7/17/2015

திடீரென உயிர்க்கிறேன்
திடீரென உயிர்க்கிறேன்
உயிர் வரை வலி சென்று

விழி வளி நீர் வந்து
கனவுகள் எனை மறந்து
நினைவுகள் நிலை குளைந்து
தரையினில் கிடக்கிறேன்
இருந்தும்
தினம் உனை நினைக்கிறேன்

7/13/2015

நான் தனிமையிலே தவிக்கிறேன்

என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே

என் தலையணைகள் ஈரமாகுது
நீர் வடியும் கண்களாலே

காதல் என்பது பிறந்ததே
அன்பு கொண்ட பெண்களாலே

அந்த காதலுக்காய் நீதிகேட்டு
வந்து நிக்கிறேன் உன் முன்னாலே

உன்னை போல் நானும்
அழகு என்று சொன்னதாலே

இதையத்தை நழுவவிட்டேன்
அவனிடம் என் கைகளாலே

ஒளிதரும் நிலவாய் இருந்தேன்
அவன் உலகினிலே

இன்று

இருட்டடித்து சென்றுவிட்டான்
என் இனிய வாழ்வினிலே

என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே

நான் தனிமையிலே தவிக்கிறேன்
பதில் சொல்லையோ வெண்ணிலவே 

7/10/2015

உயிர் பிரிந்தபின்பும்

 நினைக்கவில்லை
நீ என்னைவிட்டு செல்வாய் என்று

நினைக்கவில்லை
என் இதையதையும்
கொன்று எடுத்து செல்வாய் என்று

நினைக்கவில்லை
என் காதல் என்னிடம்
இப்பொழுது இல்லை என்று

நினைக்கவில்லை
கண்கள் முளித்திருக்கும்போதே
இறந்துவிட்டேன் என்று

ஆனாள்

நினைத்திருக்கிறேன்
உன்னை மட்டும்தான் - என்
உயிர் பிரிந்தபின்பும்


பணத்துக்காய்

பணத்துக்காய்
உயிருள்ள 
பிணமாய் மாறும் 
மனிதர்கள்

7/03/2015

துடிக்குது இதயம்


ஏனோ தெரியல
ஆசையா இருக்கு
பேச

மீசை குத்திய
முகம் சிகப்பாய் 
மாற

கண்கள் நான்கும்
ஒன்றாய்
சேர

துடிக்குது இதயம்
உன்னை மட்டும்
காண

6/22/2015

அப்பா என்றால் மரியாதைதான்

அப்பா 

தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் 
பிள்ளைகளுக்காய் தலையாட்டும் குணம் 
அம்மாவையே வெறுக்கவைக்கும் 

யாரோவாக இருந்து 
என்னை கட்டிய கணவனுக்கே 
வெட்கப்படாமல் முத்தம் 
கொடுக்கும் போது 

என்னை பெத்த அப்பா மடியேறி 
முறுக்கு மீசையை 
கையால் முறுக்கிவிட்டு 
முத்தம் கொடுக்க ஆசை 
இருந்தும் 
அப்பா பயம் போகவில்லை 

அப்பா என்றால் மரியாதைதான்

6/12/2015

காதல்

பேரூந்து படிகளைவிட்டு
இறங்கி நடக்கும்போது
யன்னலோரம் இருந்து
திரும்பி பார்க்க துடிக்கும்
இதயத்திற்கு என்ன பெயர்

காதல்

6/05/2015

அம்மா

அம்மா
மனிதன் 
கடவுளை
கல்லாக்கினான் 
கருவறைக்குள்
அம்மா 
என்னை
உயிராக்கினால் 
கருவறைக்குள்

6/01/2015

நிஜமாக ஒரு காதல்

நிழலோடு நீ நடக்க
உன்னோடு நான் நடக்க
மனதோடு ஒரு வார்த்தை
மறக்காமல் சொல்வாயா

இடையோடு உடை ஆட
உடையாமல் நான் பார்க்க
நெளியாமல் ஒரு முத்தம்
அலுக்காமல் தருவாயா

விரலோடு விரல் கோர்த்து
விழியோடு விழி சேர்த்து
புரியாத புதிருக்கு
பதில் ஒன்று சொல்வாயா

இரவோடு இருள் சேர
கனவோடு நான் சேர
நிஜமாக ஒரு காதல்
உயிராக தருவாயா

5/29/2015

பக்கத்தில் வந்தாலே


பக்கத்தில் வந்தாலே 
முத்தத்தில் நனைகிறேன் 
வெக்கத்தில் வீழ்ந்து -நான்
சொர்க்கத்திக் சாகிறேன் 

மிச்சங்கள் வைக்காமல் 
மச்சங்கள் எண்ணுகிறாய் 
மொத்தத்தில் பிடிச்சிருக்கு - உன் மூச்சு 
சத்தத்தில் வாழ்வுகொடு

5/25/2015

மறைக்க நினைத்தால்

மறைக்க நினைத்தால் 
கனக்க நினைக்க தோன்றும்
உண்மை சொன்னால் 
மனது அமைதிகொள்ளும்

5/22/2015

என் காதல் இரவு

என் காதல் இரவு
மலர்கள் பூத்து
காத்து கிடக்கும்
மாலை நேரத்தில்
வண்டுகள் தேன்முட்டி
மயங்கி கிடக்கும்
அந்தி நேரத்தில்
உன் கை பிடித்து
கூட்டிசெல்வேன்
பூங்காவுக்கு
கல்லில் செய்த கதிரையில்
கைகள் இரண்டும்பற்ற
கதைகள் பேசுவேன் - உன்
கண்களையே நான் பார்ப்பேன்
சின்ன சின்ன சினுங்களும்
குட்டி குட்டி கோவமும்
மெல்ல தோளில் சாய்தலும்
எல்லாம் சேர்ந்து ஒரு காதலாய்
விட்டு கொடுக்கா பேச்சுக்களும்
கிட்ட வந்து முட்டி நிப்பதும்
சொட்ட சொட்ட
தேன் ஊரும் சொண்டுகளும்
சூரியனையயே கண்ணடித்து
மறைத்துவிடும் கடலுக்குள்
மெல்ல காலால் கோலமும்
மெல் கூந்தல்
கையில் சிக்குவதும்
தீண்ட ஏங்கி
எல்லை தாண்டா நிப்பதும்
வேண்டுமென்றே
தோள் முட்டி கதைப்பதும்
வேதம் சொல்லும் காதலாக
மாலை மறைந்து
கண்கள் இருட்ட
மனமே இல்லாமல்
கால்கள் எழும்ப
வீடு செல்லும் வேளையில் - என்னை
விட்டு சென்றாய் சாலையில்
அந்த நினைவுகளுடன்
என் காதல் இரவு
காத்திருக்கும் விடியலுக்காய்

5/18/2015

என் தாய் மண்ணே

தேசங்கள் தாண்டி நீ 
வாழ்ந்தாலும் - என்
சுவாசங்கள் தோறும்
உன் ஞாபகம்

என் தாய் மண்ணே

5/15/2015

தானை தலைவன் சிந்தனைகள்

காலாற கடலோரம்
நடை போட வந்தேன்
கடலைகள் கதைகொண்டு 
கரைதேடி வந்தது
நிலையான தீர்வொன்று
எமக்கிங்கு கிடைக்காதாம்
நிம்மதியாய் ஊர்ப்பக்கம்
தலை காட்ட முடியாதாம்
ஆட்சி மாற்றம் நடந்தாலும்
பேச்சில் மாற்றம் இல்லையாம்
அரிசி விலை குறைந்தாலும்
அடிமை நிலை மாறாதாம்
போட்டி போட்டு பலநாடுகள்
தேடி ஓடி வருகினமாம்
வேட்டி கூட இல்லாமல்
போகும் நிலை உண்டாகுமாம்
உலகத்து நாடுகளில்
ஊறுகாயாம் எங்களினம்
தேவைக்கு தொட்டுவிட்டு 
இல்லையென்றால் விட்டுவிடுமாம்
யாரோ யாரோ சொன்னதுக்கெல்லாம்
தலையை ஆட்டும் அரசியலாம்
தானை தலைவன் சிந்தனைகள்
தலைகீழாய் கிடக்கிறதாம்
வசதி வாய்ப்பு வந்ததுமே
உரிமை எல்லாம் மறந்து போச்சாம்
கட்டி வச்சு அடிச்சாலும்
சோறு போட்டால் சந்தோசமாம்
கரை தொட்டு வந்த அலைகள்
நுரை கக்கி சொன்னதெல்லாம்
வரி கட்டி சொல்லிவிட்டேன்
உண்மை பொய் யார் அறிவார்