6/27/2011

தனியாக காத்திருப்பேன்


கருமேகம் புடைசூழும் நீலவானம்
சிறுபறவை கூச்சலிட்டு
ஓடித்திரியும்
இதமான குளிர்காற்று
உடல் வருடும்
எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்


சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்


நெஞ்சை நிமித்தும் கோபுரங்கள்
வானைத்தொடும்
இயந்திரமாய் மனிதர் கூட்டம்
ஓடிப்போகும்
நெஞ்சிருக அணைத்து ஒரு
முத்தம் வைக்க
சன நெரிசலிலே தனியாய்
காத்திருப்பேன்


காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்


சூடாக்கும் உதடுகளை
தேநீர் கோப்பை
செய்தி தானாக சொல்லிவிடும்
கண்ணின் ஆசை
தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி

6/19/2011

உடல் இல்லாமல் உயிர் வாழ்வது


உடல் இல்லாமல் உயிர் வாழ்வதும்
உயிர் இல்லாமில் உடல் வாழ்வதும்

சிறை இல்லாமல் சிறை ஆவதும்
சிறைக்குள்ளேயே விடுதலை ஆவதும்

பிணம் இல்லாமல் கிரிகை செய்வதும்
இறுதி வரை பிணமாக இருப்பதும்

கண்கள் இல்லாமலே கண்ணீர் விடுவதும்
கண்ணீர் வற்றிய கண்ங்கள் இருப்பதும்

உணர்வில்லாமல் ஊமையாவதும்
ஊமையே உணர்வாவதும்

வன்னி மண்ணில்

அல்லது

தமிழ் இனத்தில்

அல்லது

மேற்கூறிய இரண்டிலும்

6/12/2011

உன்னையே நீ மறந்திடுவாய்


தடாகத்து தாமரையோ
தரணியில் பூத்த தேவதையோ
தங்கத்தில் கடைந்தெடுத்த
தளததளக்கும் பெண்தானோ

காதல் ரசம் சொட்டுகின்ற
கண்களில் காமம் இல்லை
தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை

நீர் எடுத்து ஆடி வந்தால்
குளிர்கின்ற பூந்தளிர்
நெஞ்சோடு அணைத்தெடுத்து
முத்தம் தரும் சுவை தனி

பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்
வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்

பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்
உயிர் தேடும் நினைப்பினிலே
உன்னையே நீ மறந்திடுவாய்

6/05/2011

கடல் மடியில் உயிர் வாடும்


நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்

நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்