9/21/2015

இலக்கணம் இல்லா இரவுகளில்

அச்சடித்த புத்தகத்தில்
பச்சை குத்திய என்இதயம்

பார்த்தவுடன் கவர்வதில்
அட்டைப்படம் உன்வர்க்கம் 

பக்கம் தட்டும் விரல்களில்
ஏங்கவைக்கும் உன் எண்ணம்

வளைந்தோடும் இடைவரியில்
விரிந்து கிடக்கும் கதையம்சம் 

விமர்சனம் இல்லா பார்வையில்
முகவுரை சொல்லும் முத்தம்

இலக்கணம் இல்லா இரவுகளில்
இலக்கியம் படைத்திடும் என்விருப்பம்

வீட்டுக்கு அழகு பெண்ணிடம்

ஒரு சொட்டு நீர்த்துளி
உன் ஈரக்கூந்தலில் இருந்து
என் நெற்றிபொட்டில் பட்டுத்தெறிக்க
சோம்பலை முறித்து
கண்விழித்து பார்க்க
வட்ட பொட்டு உன் நெற்றியில்
வண்ணமாய் ஜொலிக்க
தாலிக்கயிறு கழுத்திலே 
வட்டமாய் நெளிய
ஈரத்துணியினால்
கூந்தல் சுற்றிகட்டி
கழுத்திலே
மிச்ச குங்குமத்தை ஒற்றி
உதட்டிலே
சிரிப்பை மட்டுமே வைத்து
காதில் பிடித்துதிருகி
காலை வணக்கம்
சொல்லும்போதே
தோற்றுவிட்டேன் உன்னுடன்
வீட்டுக்கு அழகு பெண்ணிடம்

9/18/2015

வாடிக்கையான விடுமுறை

வளைந்தோடும் வீதியில் 
நெடுந்தூர பயணம் 
மகிழ்ந்தூரில் அவளும் 
அழகான பாடலும்

சிலிர்க்கின்ற தேகமும் 
சிரித்துகொண்டே காதலும் 
நினைக்காத நேரத்தில் 
நெஞ்சிலிலே அவள் ஸ்பரிசமும்

இசைகேற்ற தலையசைவும் 
மலைகளிலே மர அசைவும்
மனசினிலே சிறகடிக்கும் 
விடுமுறை நாள் விருந்தளிப்பும்

ஓரக்கண் பார்வைகளும் 
வீதி சமிஞ்சை குளம்புவதும்
விபத்து நடக்க வழியிருந்தும்
வீதி ஒழுங்கை நினைப்பதும்

மாட்டி கொண்ட இதையங்கள் 
மகிழ்வுடனே பறப்பதும் 
காவல்துறையை கண்டதும் 
நல்லவர் போல் நடிப்பதும்

மாதமொரு விடுமுறையால் 
மகிழ்ச்சியிலே திளைப்பதும்
மகிழ்ச்சியில் திளைத்ததை 
அடுத்த மாதம்வரை நினைப்பதும்

அவசர உலக வாழ்கையிலே 
வாடிக்கையான விடுமுறையே

9/16/2015

மாலை சூடும் நேரம்வரைக்கும்

நிமிடம்தோறும் உந்தன்நினைப்பு
நினைத்து நினைத்து எனக்குள்சிரிப்பு
பட்டாம் பூச்சி இதயத்துடிப்பு
பார்க்க துடிக்கும் அன்பின் அணைப்பு

கிட்ட வந்தால் வெட்க்கப்படுவேன்
எட்ட சென்றால் ஏங்கி தவிப்பேன்
மூச்சு முட்ட காதல் கொள்வேன்
சொல்ல முடியாமல் குழம்பி நிப்பேன்

கண்ணை பார்க்காதே நாணம் கொள்வேன்
கண்ணால் பார்க்காதேஉருகி வடிவேன்
கட்டி பிடிக்காதே தேகம் குழைவேன்
கரைகள் படியாமல் காத்து கிடப்பேன்

மாலை சூடும் நேரம்வரைக்கும்
மணவறைக்கோளம் காணும்வரைக்கும்
விடுமுறை இல்லா வெட்கம் கொள்வேன்
விரும்பியே உன்னை தள்ளிவைப்பேன்

9/14/2015

விழுந்துவிட்டேன் காதலில்

நீ 
வீதியை கடக்கமுன்பே 
நான் 
விழுந்துவிட்டேன் காதலில்

9/11/2015

மொட்டை போட்டுவிட்டாய்


கூந்தல்
கலைத்து விளையாடும்
தென்றல் காற்றாய் - உன்
பின்னாலே வந்தேன்

நீ

கூந்தலே வேண்டாமென்று
வெட்டிவிட்டாய்
என் காதலுக்கு
மொட்டை போட்டுவிட்டாய்

9/10/2015

நதியா

நதியா 
இடையா 
நெளிகிறதே 
தனியா


9/09/2015

வெட்க்கமின்றியே பறக்கிறேன்

விடுமுறை நாள் 
அதிகாலை
துயில் கொள்ளும் 
கட்டிலின் மேலே
இரு கைகளுக்குள் - நீ 
குழந்தைபோல 

வெட்கப்பட்டு சிரிக்கிறாய் - நான் 
வெட்க்கமின்றியே பறக்கிறேன்

9/08/2015

என் நெஞ்சில்

முட்டாமல் கிட்ட வந்து 
முத்தங்கள் நூறு தந்து 
நிற்காமல் போகும் தென்றலாய்
*****
என்னையும் பார்க்காமல் 
என் கண்ணையும் பார்க்காமல் 
மண்ணையே பார்க்கும் வெக்கமாய் 
******
சொன்னதும் கேக்காமல் 
கேட்டதும் சொல்லாமல் 
பெண்ணென நெளியும் ஓடையாய் 
*****
மெல்லவும் முடியாமல் 
தின்னவும் முடியாமல் 
காதல் நெஞ்சில் சிக்கலாய் 
****
தப்பவும் முடியாமல் 
தப்பிக்கவும் நினைக்காமல் 
கையைகட்டி நிக்கிறாய் 

என் நெஞ்சில் 

9/07/2015

யாயும் ஞாயும் யாராகியரோ

வழி அனுப்பிவிட்டு 
வாசலில் விழிகரைந்து 
நிற்பதும் 

வாசல் வரும்முன்னே 
ஆயிரம் முத்தங்கள் 
தருவதும் 

உயிர் உள்ளிருந்து 
வெளியில் செல்வதுபோல்
நினைப்பதும் 

அனுப்பி விட்டு 
நினைவு தோட்டத்தில் 
மலர் பறிப்பதும் 

அப்பப்ப சிரிப்பதும் 
அழகான படங்கள் எடுத்து 
பார்ப்பதும் 

அலை பேசியில் 
நொடிக்கொரு முறை 
தகவல்கள் சொல்வதும் 

வீடு திரும்பும் வேளை 
ஓடிவந்து கட்டி 
அணைப்பதும் 

குட்டி பூனைபோல் 
என் கால்களுக்குள்ளே 
நிற்பதும் 

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

9/04/2015

என் காலை உணவு

மூன்று செத்தல் மிளகாய் 
நான்கு சின்ன வெங்காயம் 
ஐந்து தேங்காய் சொட்டு 
ஆறு கருவப்பிள்ளை 
கொஞ்சம் உப்புவைச்சு 
அம்மியில் அரைச்ச சம்பல்போல 
சிவந்திருக்கும் உன் சொண்டை 
கடித்துக்கொண்டே முடிக்கவா 
என் காலை உணவை

9/03/2015

இதயத்தில்

தழுவும் தாவணியில்
தவறிவிழுந்த இதயத்தை
வெட்கப்பட முன்னே
ஏந்திவிட்டேன் - என்
இதயத்தில்
.....
தழுவிய தாவணியை
தலைகுனிந்தே அள்ளியெடுத்து 
குழந்தை போல்
நெஞ்சிலே போட்டபோது
நானும் உன் இதயத்துக்குள்

9/02/2015

கோவில் கதவு

ஆறுகால பூசையில்லா 
காதல் கோவில் 
பாத கொலுசு 
பூஜை மணியாக 
முத்த துகள்கள் 
தீர்த்த துளியாக
அள்ளிகொடுக்கும் ஆண்டவனாய் 
நீ 
அள்ளி எடுக்கும் பக்தனாய் 
நான்
கோவில் கதவு 
எப்பொழுதும் பூட்டுதான்

9/01/2015

காலைப்பொழுதுகளெல்லாம்

நீ
நீராடிய பின்
தீர்த்தமாடும்
உன் கூந்தல் முடியில்
ஒரு சொட்டு நீர்த்துளி
என் கன்னத்தில் பட்டு
நான் துயில் எழும்பும்
காலைப்பொழுதுகளெல்லாம் 
உனக்கு மறுகுளியல்தான்