5/31/2011

எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

நீண்டதோர் வாழ்கை பயணம்
நிலைத்திடா உயிர்கள் இணையும்
உறவுகளின் உச்ச சங்கமம் - தொடர்
கதையாய் போகும் உற்சவம்

இடையிலே சேரும் பல உறவு
பாதியிலே முறியும் சில உறவு
உயிருடன் சேரும் ஒரு கனவு - அது
இறுதி வரை வரும் ஒரு உறவு

பணத்தாலே சேரும் பல உறவு
குணத்தாலே சேரும் சில உறவு
ஆபத்தில் உதவுவது எந்த உறவு - அது
எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

5/22/2011

நாகரிகமற்ற வாழ்க்கை


வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
கேவலம்
எம்மால் முடியவில்லை
பிச்சை ஏந்தும் கைகள்
சாகவும் மனமில்லை
வாழவும் பிடிக்கவில்லை
நப்பாசையில் நகரும்
நாகரிகமற்ற வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை

5/15/2011

காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே


புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்

தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள்
தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள்
பார்த்து விட்டு போகும் உன்னுடைய அம்மா
பார்த்துக்கொண்டே இருக்கும் என்னுடைய கண்கள்

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை

காதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்
காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்

உன் இடுப்பிலே இப்பொழுது சிறுபிள்ளை
கைதியாய் இருக்கின்றேன் நான் சிறைக்குள்ளே
கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே

5/08/2011

நான் உரைக்கும் கவிதைகள்


சிந்தனைகளே
கவிதையின் ஆசான்

கற்பனைகளே
கவிதையின் வகுப்பறை

சொற்கள்களே
வகுப்பறை பாடங்கள்

உணர்வுகளே
எழுதுகோலின் மைகள்

உண்மையே
நான் உரைக்கும் கவிதைகள்

5/01/2011

தொடருகின்ற மௌனம்


பனி படர்ந்த வானம்
முகில் புக முனையும்
யன்னல் கதவு


சில நிமிட யோசனை
சிலிர்க்வைக்கும் நினைப்பு
சிலையென நீ

ஒருநிமிட மௌனம்
ஓரக்கண் பார்வை
ஒரு விரல் ஸ்பரிசம்

கனத்திடும் கனவு
கலைந்திடும் கூந்தல்
கால்களால் கோலம்

வியக்கவைக்கும் அழகு
வியர்த்துகொட்டும் குளிர்
விடை தேடும் விழிகள்

சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை

மூன்று முறை முயற்ச்சித்தும்
மூச்சு விட முடியாமல்
தொடருகின்ற மௌனம்