1/21/2009

இறுதிக்காலம்

......................................


இறக்கப்போறேனா


இறந்துவிட்டேனா


இறக்கப்போறேன் போல - சுற்றிவர


உறவுகளும் உறிதிக்கட்டுகளும்

..................................

1/19/2009

நினைக்கின்ற உறவுகளே

............................................

இரத்தம் ஊடறுக்கும் நாளங்களில்

பிரிந்த உறவுகளின் உச்சரிப்பு

இதயம் தேடிவரும் வாழ்த்துக்களில்

புன்னகைத்து திறக்கும் உதடு

இமை பாரம் கொண்டு மடல் மூடுகையில்

வஞ்சித்த உருவங்களின் அணிவகுப்பு

எப்போதாவது மடல் வருகையில்

பின்னோக்கி நகர்ந்து விடும் நினவுச்சமாதி

நினைக்கின்ற உறவுகளே போதும்

இருக்கின்ற வாழ்க்கையை கண்டுகளிக்க

..............................................

1/18/2009

உண்மை உறவு


...............................................

உண்மை

உறவுகளுக்கான உணர்வுகள் உண்மை

உறவுகளுக்கான இதயத்துடிப்பு உண்மை- என்

கண்களை மட்டும் நம்பாதீர்

இதயத்தை வாசிக்கும் அறிவைத் தேடுங்கள்

தோல்களை சுருக்கி உணர்வுகள்

காட்ட முடியாது என்னால் - அப்படி

வாசிக்கவும்முடியாது உங்களால்

உள்ளிருப்பதை உருக உருக வாசித்து

உற்சாக கூத்தாடி உணர்ந்து அழவேண்டும்

சொந்தங்களை விட்டுவருகிறேன் என கூறக்கூட

சந்தர்ப்பமின்றி வந்துவிட்டேன்

தொண்டை நரம்புகள் புடைத்துக்கிளிய

உண்மைகளை உரக்கக் கத்தவேண்டும்

நான் உண்மையில் உங்களில்

அன்புவைத்திருக்கிறேன்

.................................................

உதறிவிட்ட உறவு

...................................................

கருங்கல் பாறையை நெஞ்சுக்குள் சுமந்து

கனத்திடும் அக்கினி நீரை கண்களுக்குள் விட்டு

ஊசலாடும் தூக்கணாம் குருவிக் கூட்டை வாழ்க்கையாக்கி

காந்தகக்காற்றினை உயிர் வரை சுவாசித்து

நரம்புகள் மட்டும் நடமாட

பிணமாகவோ உயிராகவோ

அலைகிறது கறை படிந்த தார் றோட்டில்

யாருக்கும் சொந்தமில்லை இவ்வுலகில் இப்பொருள்

வாழ்க்கை சூட்சுமமதில் சுழண்டடித்த பின்னர்

கடவுள் வரை சென்றுவிட்டேன்

மன்னிப்பும் கேட்டுவிட்டேன்

இதுவரைக்கும் வெடிக்கவில்லை

இறுகியிருந்த இதயப்பாறை.

...................................................

ஓரு கதை

......................................

வெடித்திடும் இதயச்சிதரல்களில்

ஆயிரம் கதைகள் இருக்கும்

அதை வெடிக்கவைக்க

கல்நெஞ்சத்தின்

ஓரு கதை போதும்

.......................................

அது ஒரு காலம்

...................................

குட்டிக்கொட்டிலுக்குள்
எட்டிப்பார்த்த
குயிலின் கீதம்

சாக்குக்கட்டிலுக்குள்
சரணாகதியடைந்த
சடலம்போன்ற ஒரு உருவம்

தோல்கள் சுருங்கி
கண்கள் இருண்டு
சேலைத்தலைப்பை
பானைதூக்க பாவிக்கும்
வரண்டபார்வையுடன்
வயதான ஒன்று

செம்பட்டையடித்த
நீட்டுக்கூந்தலுடன்
நானும் அழகுஎன்ற
நம்பிக்கையுடன் ஒரு பெண்

சீருடைஅணிந்த
திருஉருவப்படம்
ஒருபக்கத்தூணில்

பாடவந்த குயில்கூட
சோகமாய் அழுதது
பாவம் இந்த மனிதர்களென்று

மழைவருமா இல்லையாஎன
வீட்டுக்குள் இருந்தே
வாணம்பார்க்கும் அளவிற்கு
கூரைதளர்ந்த கொட்டிலது

ஓரமாய் குயில் உள்ளேசென்று
சாக்குப்பைக்குள்
சல்லடை போட்டது

பட்டுச்சட்டையுடன்
பளபளக்கும் நகைபூட்டி
குட்டிச்சிறுமி ஒன்று

கூட்டுக்குயிலை
திறந்துவிடும் படம்

ஓட்டிலேறி அன்ரனா திருத்தும்
சின்னப்பையனின் படம்

பட்டு மெத்தையில் பளபளக்கும்
உடுப்புடன் அம்மாவின் படம்

முறுக்குமீசையுடன் மோட்டார் வண்டியில்
அப்பாவின் படம்

பார்த்தவுடன் விளங்கிவிடும்
இவர்கள்தான் அவர்களென்று
அது ஒரு காலம்

..........................................

1/17/2009

காதல் கடிதம்

.............................

எழுதி எழுதிப்பார்த்தேன்

தெரிவது உந்தன் முகம்தான்

கசக்கிப்போட்டுப்பார்த்தேன்

உயிர் வந்து விரிகிறதே

...............................

எங்களுக்கே தெரியும் எங்கள் சாவு

....................................

ஐமன் இப்பொழுது

எங்கள் சொந்தக்காரன்தான்

அடிக்கடி எங்கள் குடும்பத்துக்குள்

வந்துபோவான்

போக்குவரத்து சிக்கலிலே - இப்போ

எங்கள் ஊரிலேயே தங்கிவிட்டான்

.....................................

ஏமாறாதே

..........................

நிலவுக்கு ஒருசொட்டு

விசம் கொடுத்தால்

கவிஞர்களெல்லாம்

தற்கொலை செய்வரோ

.........................