12/18/2011

தூரத்து நிலவு


நிலவை விரைவில்
மறைய கேட்கிறான்
உன்னை அருகில் பார்க்கும்
நாளை எண்ணி
************
நிலவை துடிக்கவைக்கிறேன்- என்
உயிரை கொடுத்து
கனவிலும் நான்
காதலிப்பதற்கு
************
தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே
****************
நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்

12/11/2011

என் சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது



சிவப்பு நிற வாழ்க்கை
தனிமையோடு வேதனை
பிரிவை தாங்கா மனதினில்
தனிமை தாங்கும் சோதனை

உறவுகள் வேண்டி உலகினில்
தனிமரம் தோப்பு அவதற்கு
தேடிய ஆணிவேர் அறுந்தது
காய்த்திட்ட கனிகளோ விழுந்தது

வறண்ட கருங்கல் பாறையில்
மோதும் எந்தன் நினைவுகள்
இரத்தம் சிந்தி விழுகிறது
எழும்ப முடியாது துடிக்கிறது

சுழல்வது இந்த பூமியெனில் - என்
வாழ்கையும் ஏன் சுழல்கிறது
கொடுப்பது எல்லாம் கடவுள் எனில் - என்
சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது

12/04/2011

கஷ்டத்தின் பின் சிரிப்பு


நிலம் உடைத்து
முளை வெடித்து
துளிர் எழுப்பும்
பயிர்கள்

கன மழையை
சுடு வெயிலை
தாங்கி வளரும்
இலைகள்

நீர் இறைக்க
மண் பதப்படுத்த
பயன் தரும்
விளைச்சல்

பட்ட துன்பம்
கடந்த நேரம்
மறந்து போகும்
முகத்தில்

11/27/2011

பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை காக்க



இதயம் விதைத்தோம் ஈழம் பிறக்க
கனவை வளர்த்தோம் காலம் முழுக்க
புயலாய் எழுந்தோம் புருவம் உயர்த்த
புழுதியில் விழுந்தோம் துரோகம் ஜெகிக்க

மூச்சை இழந்தோம் முதுகில் குத்த
பேச்சை இழந்தோம் சிறையில் அடைக்க
சாக துடித்தோம் மண்ணை அணைக்க
சாபம் பெற்றோம் தமிழ் மண்ணை இழக்க

வேள்வி செய்த்தோம் வெற்றி எடுக்க
வெட்ட வீழ்ந்தோம் காட்டி கொடுக்க
நம்பி இருந்தோம் உதவி கிடைக்க
நாயாய்  அலைந்தோம் அவர் கையை விரிக்க

இனமாய் அழிந்தோம் மானம் காக்க
பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை மீட்க
நினைவாய் சுமக்கிறோம் ஈழம் வெல்ல
எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க

11/17/2011

சேர்ந்திட துடிப்பது காதல் இதயம்


உயிருக்குள் உயிரான உறவே - என்
உறவுக்குள் தாயான அமுதே
நிலவுக்குள் ஒளியான அழகே - நீ
நினைக்கின்ற காதல் இனிதே

பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி
கலக்கின்ற போது என் மனைவி
கடைசிவரை நீயே என் துணைவி

தொடங்கிட்ட போது காதல் இளமை
தொடர்கின்ற போது காதல் இனிமை
புரிகின்ற போது காதல் வாழ்க்கை
புன்னகையே நீ காதல் சேர்க்கை

அருகினில் இருப்பது என்றும் அன்பு
அடிக்கடி நினைப்பது இரண்டும் மனசு
சேர்ந்திட துடிப்பது காதல் இதயம் - கை
கோர்த்திட வேண்டும் என் தெய்வம்

11/13/2011

இலட்சியம் என்பது வேசங்கள்



இலக்குடைந்த
பயணங்கள்
பாதை தோறும்
பள்ளங்கள்
இடர் நிறைந்த
வாழக்கையில்
இலட்சியம் என்பது
வேசங்கள்

பசி நிறைந்த
மேனியில்
உயிர் பிழைக்கும்
மூச்சுக்கள்
உடல் களைத்து
உழைத்தாலும்
சொற்பமாக வரும்
காசுகள்

உடல் விரும்பி
உளம் விரும்பி
துணை விரும்பி
குழந்தைகள் - அவர்
மனம்விரும்பி
நடப்பதற்கு
மரணத்தை தொடும்
வேலைகள்

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்

11/06/2011

வெட்கம் இன்றி வெளிநாடு வந்து



நீல வானில் வெள்ளை மேகம்
நீந்தி திரியும் பஞ்சுக்கூட்டம்
திரத்தி சென்று சேரும் நேரம் - நான்
காதல் கொண்ட கதையை சொல்லும்

உயர மரத்தில் ஒற்றைக்குருவி
ஊரூ முழுக்க பாட்டு சொல்லி
சிறகடிக்கும் காலைப்பொழுதில் - என்
மனசு முழுக்க உவகைகொள்ளும்

கூதல் காற்றில் உடல் விறைத்துப்போக
இரட்டைப்போர்வையை இழுத்து மூட
வெட்க்கப்படும் நினவுத்தோட்டம்
வேர்த்துக்கொட்டும் இருமனசுக் கூட்டம்

காலைப்பொழுதில் கடைக்கு சென்று
பாலும் வெதுப்பியும் வாங்கிவந்து
சூடாய் கோப்பி குடிக்கும் போது - அவள்
ஸ்பரிசம் என்று நா உணர்ந்துகொள்ளும்

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே


10/30/2011

கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை


நினைவு தேடி ஓடுகின்ற நெஞ்சம்
நிழலைக்கூட காதலிக்கும் உள்ளம்
இடைவெளிகள் கொடுமை செய்யும் காலம்
எப்பொழுது இரண்டும் ஒன்று சேரும்

நிலவை பிரிந்து வாழ்வதிங்கு கொடுமை
மன்னன் காதலுக்கு வந்ததிங்கு வறுமை
கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை

மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்

காதல் மட்டும் வாழுகின்ற உலகில்
தேடல் கொண்டு காதலித்த பொழுதில்
காத்திருப்பின் கொடுமை செய்யும் வேலை
கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை

10/23/2011

தலைவா உனக்கு நன்றி சொல்ல


தலைவா உனக்கு நன்றி சொல்ல

தலைவா உனக்கு நன்றி சொல்ல
தவமிருப்பேன் தனியாக
விரைவாய் உன்னை காண்பதற்கு
விழித்திருப்பேன் பகலாக

சுகமாய் உனக்கு சுகம் தரவே
இனித்திருபேன் கனியாக
நிறைவாய் உன்னை மகிழ்விக்க
மறந்த்திடுவேன் நான் உயிராக

கனவாய் நான் காத்திருக்கிறேன்
கண்களில் ஏக்கம் சேர்த்திருக்கிறேன்
விரல்களில் ஸ்பரிசம் தேடிநின்று
சிந்தை முழுக்க சிலிர்த்திருக்கிறேன்

படைகளின் வீரம் கொண்டவனே
பகைகளை அடக்கி ஆள்பவனே
மெதுமகள் மேனி தொடுவதற்கு
உன் கருணையின் கண்களை திறந்துவிடு

10/16/2011

சுறுசுறுப்பை சொல்லிவிடும்


சாளரத்தின் சேலையை
சற்று நான் திறக்கையில்
வெட்கம் கொண்டு காலைப்பொழுது
கட்சிதமாய் விடிகிறது

போர்வை விலக்கி குயில்கள் கூவ
பனி நீரை எடுத்து இலைகள் மூள்க
சோம்பல் முறித்த சூரியானோ
ஆம்பல் கண்ணை திறக்கின்றான்

சாலையில் வாகனம் ஊர்வலம் செல்ல
சடுதியாய் மஞ்சள் சிவப்பு சமிஞ்சை விழ
மனசு ஒருமுறை நிற்கிறது
மறுபடியும் ஏதோ நினைக்கிறது

வேகநடை இரண்டு கால்கள்
பறந்து செல்லும் நாலு சில்கள்
சுறுசுறுப்பை சொல்லிவிடும் - நான்
முழுஇரவு பணிமுடித்து திரும்பும்போது

10/10/2011

விடியலை காண துடித்திடும் நினைப்பு


கண்ணை மூடும் கருப்பு வாணம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று

அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்

குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்க்கும் பிள்ளையின் சிணுங்கள்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்

தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

9/25/2011

அத்தை மகள் சுவைதானோ



நெஞ்சினிலே தஞ்சம் கொள்ளும்
தேவதை இவள்தானோ
கண்களாலே கவிதை சொல்லும்
அத்தை மகள் சுவைதானோ

கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ

அள்ளி அணைக்க சொல்லிநிக்கும்
அடக்கமான மெல் உடல்தானோ
அமைதிக்கு விலை பேசும்
வட்டநிலா முகம்தானோ

கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ

9/18/2011

காதல் கடவுள் மட்டும் கல்லு

பரந்தவெளி வானம்
பரவிக்கிடக்கும் மேகம்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரம்
சிரித்து பேசும் வெண்ணிலா

அழுது வடிக்கும் மழை
அழகாய் பிடிக்கும் குடை
ஓடித்திரியும் வெள்ளம்
நிரம்பி வழியும் உள்ளம்

பச்சைக்கடல் வயல்
பாகம் பிரிக்கும் வரப்பு
முத்து முத்தாய் நெல்லு
வெள்ளை நெல்லாய் அவள் பல்லு

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

பனைமரம் விழுந்த வீதி
இரு மருங்கிலும் புல்லினச்சாதி
விரிந்து ஒடுங்கிடும் கண்கள்
அவள் வீட்டுக்கு போகும் கால்கள்

முளை நிமிர்ந்த கோவில்
மடை திறந்த கருணை
கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு

9/11/2011

மோக போதை நகரம்



படபடக்கும் இயந்திர இதயம்
பெருமூச்சு விடும் புகைபோக்கி
உழைத்தால் தான் உயிர்பிழைகமுடியுமென
தயார்படுத்தும் மனிதவலு நகரம்

காலைக்காய் கண்மூடி காத்திருந்து
கூட்டை விட்டு பறந்துபோகும்
பறவைகளாய் மனிதர்
உலகுடன் போராட வியர்வைசிந்தும்

இறுகிய முகங்கள் கொண்டு
இதிகாசம் படைப்பதாய் எண்ணி
உடல் உழைப்பை உறிஞ்சவிடும்
ஊமையாகும் எலும்புக்கூடுகள்

மகிழ்ச்சிக்கு வடிவமைக்கபட்ட
மது மாது பாணக்கடைகளிலே
உதடுருஞ்சி உடல் குளுங்கி
உற்சாக மோகம் கொள்ளும்

குடும்ப உறவை காட்டுவத்தில்லை
குழந்தை அன்பை பேசுவதில்லை
குடும்பம் என்றால் வளர்ச்சிக்கு
தடைவிதிக்கும் படிக்கல் என்றும்

தனியாக பிரித்துவைக்கும்
தனக்கென்றே தயார் படுத்தும்
புரட்சி என்று சொல்லிகொன்று
மனிதத்தை அழித்திவிடும்

ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்

9/04/2011

அவசரத்தில் விடிந்த அதிகாலை


கரும்பறவை சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புதுப்பொழிவுதர

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை 



8/30/2011

செங்கொடி வெந்ததோ தீயினில்



உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா

நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே

8/21/2011

நட்பு


நீ சிரித்தால்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்

நீ நடந்தால்
நட்பும் நடக்கும்
நீ விழுந்தால் - (நட்பு)
கை கொடுக்கும்

நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்

8/14/2011

நான் வருவேன் மறுமுறை


மீண்டும் ஒருமுறை என்
மண்ணை மிதித்திட
வேண்டும் விடுதலை

நான் ஆண்ட பூமியை
தோண்டி பார்த்திட
வேண்டும் பலமுறை

நான் விட்டு வந்த
சொந்த பந்தங்கள்
செத்தது எதுவரை

அவர் வீர எலும்பினை
தேடி எடுத்து
தேடவேண்டும் உறவினை

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை

உண்மை மகனாய்
ஒற்றை மகவாய் - என்ன
செய்தேன் இதுவரை

பெற்ற தாயையும்
சொந்த மண்ணையும்
விட்டேன் அது குறை

கூடி குழாவி
கும்மி அடித்த
உறவுகள் உள்ளீரோ

ஒருவர் இருந்தாலும்
தந்தி அனுப்புங்கள்
நான் வருவேன் மறுமுறை

8/07/2011

தமிழ் அன்னையின் கதறல்

டிஸ்கி - ஈழதமிழ் சமுகத்தின் முதுபெரும் புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மறைந்தது ஒருமாதம் ஆகின்றது அதை முன்னிட்டு



தமிழுக்கு பிறந்தவனே
தமிழோடு வளர்ந்தவனே
தமிழுக்குள் ஆய்வு செய்து
தமிழையே வளர்த்தவனே

நீ இன்றி தமிழ் இல்லை
தமிழ் இன்றி நீ இல்லை
உலகத்தில் தமிழ் மொழியை
தலை நிமிர்த்திய என் பிள்ளை

இயல் இசை நாடகத்தில்
இயல்புடனே இசைந்தவனே
நாட்டுப்புற நாடகத்துக்கே
நாட்டாமை ஆனவனே

சமூகவியல் பொருளியலில்
அறிவுத்திறன் கொண்டவனே
மாக்சிச கொள்கையிலே
மாறாமல் வந்தவனே

பர்மிங்காம் பல்கலையில்
தமிழ் கற்க சென்றுவிட்டு
நீ செய்த ஆய்வினால்
தமிழ் உன்னை கற்றதடா

இலக்கணங்கள் இலக்கியங்கள்
எடுத்தவுடன் பறந்து வரும்
நீ எழுதிய புத்தகங்கள்
நினைக்கவே தமிழ் வளரும்

கைலாசபதி மௌனகுரு என
தமிழ் நட்பு கொண்டவனே
பிழையென்றால் நேரே சொல்வாய்
கலைஞ்ஞசருக்கே மறுப்பு சொன்னாய்

தமிழில் உள்ள பற்றுனாலே
மண் மீது காதல் கொண்டாய்
தமிழருக்கு தீர்வு காண
அரசியல் கொள்கை கொண்டாய்

தமிழ் துறையில் நீ தலைவன்
புத்தகத்தில் நீ புலவன்
எத்தனை பேருக்கு உன்கையால்
தமிழ் பால் கொடுத்திருப்பாய்

ஈழத்தமிழ் சமுகத்தின்
முது பெரும் முனைவரே
காலத்தின் கட்டளையால்
கண் மூடி விட்டாயே

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்

மிக்சி - கலைஞ்ஞருக்கே மறுப்பு சொன்னாய் - செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அழைப்பு வந்ததும் கலைஞ்ஞர் கருணாநிதியிடம் ஈழத்தமிழர் பற்றிய தெளிவான கொள்கை இல்லை ஆதலால் கலந்துகொள்ள மாட்டேன் என மறுப்பு கடிதம் அனுப்பியவர்

இறுதி சேர்க்கை

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

இவர் மறுப்பு கடிதம் அனுப்பியதும் உண்மை கலந்து கொண்டதும் உண்மை

தவறுக்கு வருந்துகின்றேன்
நன்றி காட்டான்

7/31/2011

பொக்கிசமான நினைவுகள்


கனவுகள் வரும் இரவுகளில்
காதலி தரும் உணர்வுகள்
விழிகளில் விழும் ஸ்பரிசங்களில்
விலகிட முடியா தருணங்கள்

அணைத்திட துடிக்கும் கைகளில்
அன்பினில் விளைந்த வித்தைகள்
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்

உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்

விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்

7/24/2011

காதல் சுகம்தரும் காதலனாய்


நிலவொன்று விழுந்ததோ
பூமியில்
நிஜ அழகொன்று படர்ந்ததோ
மேனியில்
கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்

கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்

இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்

7/17/2011

என் காதல் குழந்தையே


இதயம் முழுக்க துடிப்பதெல்லாம்
உந்தன் காதலே
இமைக்கிடையில் கண்கள் இல்லை
காதல் பூக்களே
வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே
வாசமுள்ள ரோஜா கூட
காதல் சொல்லுமே

எண்ணம் முழுக்க உன்னைப்பற்றி
மட்டும் நினைக்குதே
கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள
ஆசை கொள்ளுதே
உதடுகள் இடையில் வருவதெல்லாம்
காதல் சொற்களே
தீர்ந்து போன பேனா கூட
காதல் சாட்சியே

வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

7/10/2011

ஏங்கிநிற்பாள்


மாலைக்கருக்கள் மயங்கும்வேளை
மனசு முழுக்க ஏக்கம் தாங்கி
வாசல் கதவில் காத்துநிற்பாள்
கணவன் வருகைக்காய் ஏங்கிநிற்பாள்

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்

வேலைப்பழுவில் சோர்ந்து விழுந்து
பாரப்பையை தோளில் சுமந்து
வீட்டு வாசலில் காலடி வைக்க
ஓடிவந்து கட்டி அணைப்பாள்

வேலைப்பையை வாங்கி வைப்பாள்
வேண்டுமென்றே சிணுங்கி முழிப்பாள்
சட்டைபொத்தானை கழட்டிவிட்டு
நெஞ்சில் தானாக சாய்ந்துகொள்வாள்

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்

7/03/2011

காதலில் விழுந்திட யார் செய்தார் செய்வினை



பனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை

சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை

நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை

நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை

6/27/2011

தனியாக காத்திருப்பேன்


கருமேகம் புடைசூழும் நீலவானம்
சிறுபறவை கூச்சலிட்டு
ஓடித்திரியும்
இதமான குளிர்காற்று
உடல் வருடும்
எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்


சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்


நெஞ்சை நிமித்தும் கோபுரங்கள்
வானைத்தொடும்
இயந்திரமாய் மனிதர் கூட்டம்
ஓடிப்போகும்
நெஞ்சிருக அணைத்து ஒரு
முத்தம் வைக்க
சன நெரிசலிலே தனியாய்
காத்திருப்பேன்


காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்


சூடாக்கும் உதடுகளை
தேநீர் கோப்பை
செய்தி தானாக சொல்லிவிடும்
கண்ணின் ஆசை
தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி

6/19/2011

உடல் இல்லாமல் உயிர் வாழ்வது


உடல் இல்லாமல் உயிர் வாழ்வதும்
உயிர் இல்லாமில் உடல் வாழ்வதும்

சிறை இல்லாமல் சிறை ஆவதும்
சிறைக்குள்ளேயே விடுதலை ஆவதும்

பிணம் இல்லாமல் கிரிகை செய்வதும்
இறுதி வரை பிணமாக இருப்பதும்

கண்கள் இல்லாமலே கண்ணீர் விடுவதும்
கண்ணீர் வற்றிய கண்ங்கள் இருப்பதும்

உணர்வில்லாமல் ஊமையாவதும்
ஊமையே உணர்வாவதும்

வன்னி மண்ணில்

அல்லது

தமிழ் இனத்தில்

அல்லது

மேற்கூறிய இரண்டிலும்

6/12/2011

உன்னையே நீ மறந்திடுவாய்


தடாகத்து தாமரையோ
தரணியில் பூத்த தேவதையோ
தங்கத்தில் கடைந்தெடுத்த
தளததளக்கும் பெண்தானோ

காதல் ரசம் சொட்டுகின்ற
கண்களில் காமம் இல்லை
தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை

நீர் எடுத்து ஆடி வந்தால்
குளிர்கின்ற பூந்தளிர்
நெஞ்சோடு அணைத்தெடுத்து
முத்தம் தரும் சுவை தனி

பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்
வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்

பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்
உயிர் தேடும் நினைப்பினிலே
உன்னையே நீ மறந்திடுவாய்

6/05/2011

கடல் மடியில் உயிர் வாடும்


நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்

நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்

5/31/2011

எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

நீண்டதோர் வாழ்கை பயணம்
நிலைத்திடா உயிர்கள் இணையும்
உறவுகளின் உச்ச சங்கமம் - தொடர்
கதையாய் போகும் உற்சவம்

இடையிலே சேரும் பல உறவு
பாதியிலே முறியும் சில உறவு
உயிருடன் சேரும் ஒரு கனவு - அது
இறுதி வரை வரும் ஒரு உறவு

பணத்தாலே சேரும் பல உறவு
குணத்தாலே சேரும் சில உறவு
ஆபத்தில் உதவுவது எந்த உறவு - அது
எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

5/22/2011

நாகரிகமற்ற வாழ்க்கை


வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
கேவலம்
எம்மால் முடியவில்லை
பிச்சை ஏந்தும் கைகள்
சாகவும் மனமில்லை
வாழவும் பிடிக்கவில்லை
நப்பாசையில் நகரும்
நாகரிகமற்ற வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை

5/15/2011

காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே


புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்

தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள்
தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள்
பார்த்து விட்டு போகும் உன்னுடைய அம்மா
பார்த்துக்கொண்டே இருக்கும் என்னுடைய கண்கள்

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை

காதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்
காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்

உன் இடுப்பிலே இப்பொழுது சிறுபிள்ளை
கைதியாய் இருக்கின்றேன் நான் சிறைக்குள்ளே
கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே

5/08/2011

நான் உரைக்கும் கவிதைகள்


சிந்தனைகளே
கவிதையின் ஆசான்

கற்பனைகளே
கவிதையின் வகுப்பறை

சொற்கள்களே
வகுப்பறை பாடங்கள்

உணர்வுகளே
எழுதுகோலின் மைகள்

உண்மையே
நான் உரைக்கும் கவிதைகள்

5/01/2011

தொடருகின்ற மௌனம்


பனி படர்ந்த வானம்
முகில் புக முனையும்
யன்னல் கதவு


சில நிமிட யோசனை
சிலிர்க்வைக்கும் நினைப்பு
சிலையென நீ

ஒருநிமிட மௌனம்
ஓரக்கண் பார்வை
ஒரு விரல் ஸ்பரிசம்

கனத்திடும் கனவு
கலைந்திடும் கூந்தல்
கால்களால் கோலம்

வியக்கவைக்கும் அழகு
வியர்த்துகொட்டும் குளிர்
விடை தேடும் விழிகள்

சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை

மூன்று முறை முயற்ச்சித்தும்
மூச்சு விட முடியாமல்
தொடருகின்ற மௌனம்

4/25/2011

பிறந்தவர் இறந்தவர் - இறந்தவர் பிறந்தவர்


தோன்றலும் மறைத்தலும்
வாழ்கையின் நியதி
தோன்றினால் வாழ்வது
இயற்கையின் விதிப்படி

தோன்றமுன் இறப்பது
கருப்பையினுடன் முடிகிறது
வாழ்ந்தபின் இறப்பது
சுடலைவரை செல்கிறது

வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்

வாழ்வதை நோக்கி
பிறந்திடும் உயிர்கள்
சாவது வரும்வரை
வாழ்வது இல்லை

விடுதலை வேண்டி
இறந்திடும் உயிர்கள்
இறந்த பின் கூட
சுதந்திரம் இல்லை

சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பதும்

4/17/2011

ஊணமுற்ற நிர்வாணம்


முடிவு செய்யப்பட மூச்சுக்காற்று
வரையறுக்கப்பட்ட மூக்குத்துவாரம்
வாயைத்திந்தால் மரண வெடி
மனிதர்களை மந்தையாக்கும்
மாண்புமிகு அரசியல்
மனித உரிமையின் பிறப்பிடத்தில்
கருச்சிதைவு
மறக்கமுடியா மனித படுகொலையை
வரவேற்க்கும் நாடுகள்
என்றைக்கும் சுயநலத்தில்
உயிர் குடிக்கும்
முற்ற நிர்வாணம்