7/31/2011

பொக்கிசமான நினைவுகள்


கனவுகள் வரும் இரவுகளில்
காதலி தரும் உணர்வுகள்
விழிகளில் விழும் ஸ்பரிசங்களில்
விலகிட முடியா தருணங்கள்

அணைத்திட துடிக்கும் கைகளில்
அன்பினில் விளைந்த வித்தைகள்
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்

உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்

விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்

7/24/2011

காதல் சுகம்தரும் காதலனாய்


நிலவொன்று விழுந்ததோ
பூமியில்
நிஜ அழகொன்று படர்ந்ததோ
மேனியில்
கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்

கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்

இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்

7/17/2011

என் காதல் குழந்தையே


இதயம் முழுக்க துடிப்பதெல்லாம்
உந்தன் காதலே
இமைக்கிடையில் கண்கள் இல்லை
காதல் பூக்களே
வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே
வாசமுள்ள ரோஜா கூட
காதல் சொல்லுமே

எண்ணம் முழுக்க உன்னைப்பற்றி
மட்டும் நினைக்குதே
கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள
ஆசை கொள்ளுதே
உதடுகள் இடையில் வருவதெல்லாம்
காதல் சொற்களே
தீர்ந்து போன பேனா கூட
காதல் சாட்சியே

வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

7/10/2011

ஏங்கிநிற்பாள்


மாலைக்கருக்கள் மயங்கும்வேளை
மனசு முழுக்க ஏக்கம் தாங்கி
வாசல் கதவில் காத்துநிற்பாள்
கணவன் வருகைக்காய் ஏங்கிநிற்பாள்

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்

வேலைப்பழுவில் சோர்ந்து விழுந்து
பாரப்பையை தோளில் சுமந்து
வீட்டு வாசலில் காலடி வைக்க
ஓடிவந்து கட்டி அணைப்பாள்

வேலைப்பையை வாங்கி வைப்பாள்
வேண்டுமென்றே சிணுங்கி முழிப்பாள்
சட்டைபொத்தானை கழட்டிவிட்டு
நெஞ்சில் தானாக சாய்ந்துகொள்வாள்

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்

7/03/2011

காதலில் விழுந்திட யார் செய்தார் செய்வினைபனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை

சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை

நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை

நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை