8/24/2012

அடியேய் என் செல்லக்குட்டி



அடியேய் என் செல்லக்குட்டி – உன்

கண்கள் என்னைக் கொல்லுதடி

விடியும்வரை காத்திருந்து

விழிகள் இரண்டும் வேர்க்குதடி


உடையாய் உன் இடை வருடி - உன்

கால்கள் இரண்டிலும் நடை பழகி

விடையே தெரியா காதலுக்காய்

காத்திருப்பேன் என் கன்றுகுட்டி


சுவரே இல்லா சித்திரமாய் –என்

காதல் சுழன்று துடிக்குதடி

கலரே இல்லா என் வாழ்வில்

தூரிகை தந்து உதவிடடி


படியே தாண்டா பத்தினியாய் – உன்

பார்வை ஏன் கீழே போகுதடி

தவியாய் கிடந்தது தவிக்கின்றேன்

கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி

8/20/2012

பச்சை மிளகாய் தின்றவளே


பச்சை மிளகாய் தின்றவளே – என்

பக்கத்தில் வந்து நின்றவளே

உதட்டின் மீது உதட்டை வைத்து - உன்

உறைப்பை என்னுள் தீர்த்தவளே


தோட்டத்து வெருளி போல

பல் இளித்து திரிஞ்ச என்னை

தோட்டக்காரனாயே ஆக்கிவிட்டு

நல் விளைச்சலும் தந்தவளே


சிமிட்டுகின்ற கண்களாலே

காரப்பார்வை பார்ப்பவளே

சினுங்குகின்ற கால் கொலுசில்

கடுகு மிளகு சேர்த்தவளே


கறுவா பையன் போல்

கறுப்பா இருந்த என்னை

மெதுவாக வறுத்தெடுத்து

சிவப்பாக ஆக்கியவளே


ஏலக்காய் பற்களாலே

கராம்பு கடி கடித்தவளே

சுக்கு மிளகு தட்டிவச்சு

தாளிச்சு போட்டவளே


உப்பையும் உறைப்பும்

உசுருக்குள், கலந்து வச்சவளே – நான்

பருப்பும் பந்தியும் போல

உன்னோடு ஓட்டினேனே.

8/14/2012

அன்புள்ள காதலுடன் காலை விடிகிறது

காலையில் உன்னை

கைபிடித்து எழுப்பி

சோம்பல் முறிக்கையில்

கட்டி அனணத்து

குளியலறை போக

சண்டை பிடித்து

குளித்து முடித்து

சாமி கும்பிட்டு

உன் நெத்தியில் நானும்

என் நெத்தியில் நீயும்

திருநீறு பூசிவிட

நீ கண்களை மூட நான் ஊத

நான் கண்களை மூட நீ ஊத

அப்படியே நான்கு கண்களும்

நடனமாடி பின்னி பிணைய

நேரம் போவதை எண்ணி

சுதாரித்து முழித்து

அவசரமாய் அடுப்படி சென்று

நீ ஆத்திவரும் தேநீருக்காய்

தொலோக்காட்சி முன் தவமிருந்து

உன்கையில் தேநீர் வாங்கி

உனக்கே பருக்கி விட

அப்படியே அதை நீ

எனக்கு பருக்கி விட

எனது காலை விடிகிறது

அன்புள்ள காதலுடன்

8/11/2012

தாயை மறப்பியா


தாயை மறப்பியா

தாய் தந்த பாலை மறப்பியா

தடக்கி விழுந்தால்தான்

தமிழில் கதைப்பியா

8/01/2012

வாணம் தாண்டிய – என் மனசு உனக்கு


கிழக்கு வானில்

உதிக்கும் சூரியன்

சிறகை விரித்து

பறக்கும் தாமரை


குளத்தில் மீன்கள்

குளித்து முடித்து

கூந்தல் ஒதுக்க

குளிரும்காற்று


நனைந்த படிகளில்

நதியின் ஓட்டம்

நெளியும் நீருக்கு

புடவை மாற்றம்


இளமை அடைக்கும்

புடவைத் தலைப்பு

நனைந்த கூந்தலில்

புதுப்பூ சிரிப்பு


காற்றில் பறக்கும்

மேனி அழகு

மேனி தாங்கும்

ஆடை குழைவு


வெட்கம் தின்ற

கண்கள் உனது

வெட்டி வைத்த

கன்னம் சிவப்பு


உச்ச ஸ்தாயியில்

ஓடும் கால்கள்

பக்க வாத்தியம்

பாடும் கொலுசு


மிச்ச ஸ்தாயியை

கேட்கும் மனசு

குச்சுபிடியாய்

துள்ளும் இதயம்


நனைந்த கூந்தல்

நனைத்த முதுகு

நடக்கும் போது

பறக்கும் இடுப்பு


குனிந்த தலையில்

சிரிக்கும் உதடு

விரிந்த கண்கள்

தேடும் அழகு


கைகள் கூப்பி

கடவுள் வணக்கம்

கண்கள் மூடி

மனசின் விருப்பம்


வரங்கள் கேட்கும்

கரங்கள் நடுங்கும்

வார்த்தை சொல்ல

உதடு துடிக்கும்


உதடு தட்டி

கண்கள் ஒத்தி

கடவுள் பார்பதாய்

என்னை பார்த்து


வரங்கள் தரும்

கண்கள் அழகு

வாணம் தாண்டிய – என்

மனசு உனக்கு