7/01/2013

துடிக்கிறது என் இதயம்

செம்புழுதி கால் பதித்து 
சீருடை நாம் அணிந்து 
கை கோர்த்து நடை பழகி 
எம் மண் மீது புரண்டெழும்பி 

பூவரசு இலை பறித்து 
பீ பீ எல்லாம் செய்து ஊதி
வயல் வரப்பில் ஏறும்புகடிக்க 
வாய்க்கால் பக்கம் ஓடி கழுவ 

எட்டுக்கோடு கிளித்தட்டு 
கிட்டிப்புள்ளு கிரிக்கெட்டு
பெட்டை பெடியள் சேர்ந்து விளையாடி 
சிரித்த பொழுது இன்னும் என் நெஞ்சில் 

ஆட்டிலறி குறிவைக்க 
ஆயுதங்கள் வெறிகொள்ள
ஊர் சிதறி ஓடி ஒழிந்து
எட்டு திக்கும் சிதறி வாழ்ந்தோம் 

பனையோரம் குந்தியிருந்து 
பால் குடித்த கிழடுகளும் 
பனை ஓலை பாயிலே 
படுத்துகிடந்த வயதுகளும் 

இன்னும் ஊரில் இருந்து புறு புறுக்க
நாம் மட்டும் ஓடி வந்தோம் தூர தேசம் 

இன்னும் என் காதில் அவலக்குரல் 
இன்னும் என்கண்ணில் சாவின் கோலம் 
இன்னும் என் கால்களில் குருதி சிதறல் 
நினைவுகளில் வந்தாலும் 

மறுபடியும் மண்மிதித்து
வைரவருக்கு மடைபரப்பி 
வயல் இரங்கி அறுவடை செய்ய 
துடிக்கிறது என் இதயம்

5 comments:

அம்பாளடியாள் said...

அழகிய சந்தக் கவிதை கண்டு அகம் மகிழ்ந்தது சகோதரா .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Seeni said...

arumai !
nantri!

Yaathoramani.blogspot.com said...

என்னையும் ஒரு அறுபதாண்டுக்காலம்
பின்னோக்கி இழுத்துச் சென்றது கவிதை
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

//
மறுபடியும் மண்மிதித்து
வைரவருக்கு மடைபரப்பி
வயல் இரங்கி அறுவடை செய்ய
துடிக்கிறது என் இதயம் //

பால்ய நினைவுகள்...

இளமதி said...

நிலங்களை இழந்தோமேயன்றி நாம்
புலன்களை இழக்கவில்ல...

அழகிய கவிதை சகோ!
கவியைப்படிக்கும்போது மனதுக்குள் மண்வாசம்...