அறுகம்புல் நுனியிலே
அழகாய் விழுந்த பனித்துளியே
உலகெரிக்கும் தணல் கொண்டு
வருகின்றான் சூரியனே
மெதுவாக கரைந்தோடு
இலையினிலே வழிந்தோடு – எம்
மனதுக்குள் உள்வந்து
கண்ணீராய் நீ மாறு
உச்சத்தில் இருப்பவர்கள்
உண்மைகளை அறிவதில்லை
கட்டாந்தரையில் இருக்கின்றோம்
கவலை சொல்கிறோம் நீ கேளு
சூரியனால் கருகுகின்றோம்
மழைவந்தால் நனைகின்றோம்
வெள்ளத்தில் அழுகிகின்றோம்
கரையான்களால் அழிகின்றோம்
குப்பை என்று எமைக்கொன்று
நெருப்புவைக்க சாகின்றோம்
பிறந்த இடம் பிழையா
பிறந்த இனம் பிழையா
வளர்ந்த முறை பிழையா
வாழ்வு நமக்கில்லையா
காற்றில் நாம் ஆடினோம்
நிமிர்ந்தே நாம் பாடினோம்
தனியாக வளராமல்
இனமாக நாம் படர்ந்தோம்
அழிந்தாலும் இனமானோம்
அழிய அழிய துளிர்கொண்டோம்
விடியலுக்காய் விழுதானோம்
விடியும் வரை உயிர்வாழ்வோம்
வடிவங்கள் மாறினாலும்
மரபனுக்கள் மாறவில்லை
எமக்கான எம்நிலத்தில் – நாளை
துளிர்க்காமல் விடமாட்டோம்
Tweet | |||||
9 comments:
எமக்கான எம்நிலத்தில் – நாளை
துளிர்க்காமல் விடமாட்டோம்
நிறைந்த நம்பிக்கையுடன் வரிகள்..
இதைத்தான் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது....
தன்னம்பிக்கை வரிகள்..
வீழ்ந்த நம் இனம் கண்டிப்பாக வீருகொண்டு எழும்
வெற்றி விதைகளலல்லவா எம் மக்கள் விதைத்துள்ளனர்... துளிர்க்க மட்டுமல்ல விருச்சமாகிடுவோம்...
ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழனின் குரல் உங்கள் கவிதையில் !
நம்பிக்கை தான் வாழ்க்கை...எல்லாம் நல்லதாய் நடக்கும்...
நான் சொல்ல நினைத்ததை ரெவெரி சொல்லி விட்டார்... ஆகையால் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரே ஒரு முழக்கத்தை மட்டும் விட்டு செல்கிறேன்.. இன்குலாப் ஜிந்தாபாத்
கனவுகள் பலிக்கட்டும்.கண்ணீரும் ஒழியட்டும்
//எமக்கான எம்நிலத்தில் – நாளை
துளிர்க்காமல் விடமாட்டோம் //
நம்பிக்கையான வரிகள்.இத்தனை வலிக்குப் பின்னும்,தளராத நம்பிக்கை.அருமை,நண்பா!
Post a Comment