8/07/2011

தமிழ் அன்னையின் கதறல்

டிஸ்கி - ஈழதமிழ் சமுகத்தின் முதுபெரும் புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மறைந்தது ஒருமாதம் ஆகின்றது அதை முன்னிட்டு



தமிழுக்கு பிறந்தவனே
தமிழோடு வளர்ந்தவனே
தமிழுக்குள் ஆய்வு செய்து
தமிழையே வளர்த்தவனே

நீ இன்றி தமிழ் இல்லை
தமிழ் இன்றி நீ இல்லை
உலகத்தில் தமிழ் மொழியை
தலை நிமிர்த்திய என் பிள்ளை

இயல் இசை நாடகத்தில்
இயல்புடனே இசைந்தவனே
நாட்டுப்புற நாடகத்துக்கே
நாட்டாமை ஆனவனே

சமூகவியல் பொருளியலில்
அறிவுத்திறன் கொண்டவனே
மாக்சிச கொள்கையிலே
மாறாமல் வந்தவனே

பர்மிங்காம் பல்கலையில்
தமிழ் கற்க சென்றுவிட்டு
நீ செய்த ஆய்வினால்
தமிழ் உன்னை கற்றதடா

இலக்கணங்கள் இலக்கியங்கள்
எடுத்தவுடன் பறந்து வரும்
நீ எழுதிய புத்தகங்கள்
நினைக்கவே தமிழ் வளரும்

கைலாசபதி மௌனகுரு என
தமிழ் நட்பு கொண்டவனே
பிழையென்றால் நேரே சொல்வாய்
கலைஞ்ஞசருக்கே மறுப்பு சொன்னாய்

தமிழில் உள்ள பற்றுனாலே
மண் மீது காதல் கொண்டாய்
தமிழருக்கு தீர்வு காண
அரசியல் கொள்கை கொண்டாய்

தமிழ் துறையில் நீ தலைவன்
புத்தகத்தில் நீ புலவன்
எத்தனை பேருக்கு உன்கையால்
தமிழ் பால் கொடுத்திருப்பாய்

ஈழத்தமிழ் சமுகத்தின்
முது பெரும் முனைவரே
காலத்தின் கட்டளையால்
கண் மூடி விட்டாயே

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்

மிக்சி - கலைஞ்ஞருக்கே மறுப்பு சொன்னாய் - செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அழைப்பு வந்ததும் கலைஞ்ஞர் கருணாநிதியிடம் ஈழத்தமிழர் பற்றிய தெளிவான கொள்கை இல்லை ஆதலால் கலந்துகொள்ள மாட்டேன் என மறுப்பு கடிதம் அனுப்பியவர்

இறுதி சேர்க்கை

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

இவர் மறுப்பு கடிதம் அனுப்பியதும் உண்மை கலந்து கொண்டதும் உண்மை

தவறுக்கு வருந்துகின்றேன்
நன்றி காட்டான்

7/31/2011

பொக்கிசமான நினைவுகள்


கனவுகள் வரும் இரவுகளில்
காதலி தரும் உணர்வுகள்
விழிகளில் விழும் ஸ்பரிசங்களில்
விலகிட முடியா தருணங்கள்

அணைத்திட துடிக்கும் கைகளில்
அன்பினில் விளைந்த வித்தைகள்
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்

உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்

விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்

7/24/2011

காதல் சுகம்தரும் காதலனாய்


நிலவொன்று விழுந்ததோ
பூமியில்
நிஜ அழகொன்று படர்ந்ததோ
மேனியில்
கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்

கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்

இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்

7/17/2011

என் காதல் குழந்தையே


இதயம் முழுக்க துடிப்பதெல்லாம்
உந்தன் காதலே
இமைக்கிடையில் கண்கள் இல்லை
காதல் பூக்களே
வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே
வாசமுள்ள ரோஜா கூட
காதல் சொல்லுமே

எண்ணம் முழுக்க உன்னைப்பற்றி
மட்டும் நினைக்குதே
கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள
ஆசை கொள்ளுதே
உதடுகள் இடையில் வருவதெல்லாம்
காதல் சொற்களே
தீர்ந்து போன பேனா கூட
காதல் சாட்சியே

வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

7/10/2011

ஏங்கிநிற்பாள்


மாலைக்கருக்கள் மயங்கும்வேளை
மனசு முழுக்க ஏக்கம் தாங்கி
வாசல் கதவில் காத்துநிற்பாள்
கணவன் வருகைக்காய் ஏங்கிநிற்பாள்

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்

வேலைப்பழுவில் சோர்ந்து விழுந்து
பாரப்பையை தோளில் சுமந்து
வீட்டு வாசலில் காலடி வைக்க
ஓடிவந்து கட்டி அணைப்பாள்

வேலைப்பையை வாங்கி வைப்பாள்
வேண்டுமென்றே சிணுங்கி முழிப்பாள்
சட்டைபொத்தானை கழட்டிவிட்டு
நெஞ்சில் தானாக சாய்ந்துகொள்வாள்

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்

7/03/2011

காதலில் விழுந்திட யார் செய்தார் செய்வினை



பனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை

சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை

நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை

நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை

6/27/2011

தனியாக காத்திருப்பேன்


கருமேகம் புடைசூழும் நீலவானம்
சிறுபறவை கூச்சலிட்டு
ஓடித்திரியும்
இதமான குளிர்காற்று
உடல் வருடும்
எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்


சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்


நெஞ்சை நிமித்தும் கோபுரங்கள்
வானைத்தொடும்
இயந்திரமாய் மனிதர் கூட்டம்
ஓடிப்போகும்
நெஞ்சிருக அணைத்து ஒரு
முத்தம் வைக்க
சன நெரிசலிலே தனியாய்
காத்திருப்பேன்


காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்


சூடாக்கும் உதடுகளை
தேநீர் கோப்பை
செய்தி தானாக சொல்லிவிடும்
கண்ணின் ஆசை
தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி

6/19/2011

உடல் இல்லாமல் உயிர் வாழ்வது


உடல் இல்லாமல் உயிர் வாழ்வதும்
உயிர் இல்லாமில் உடல் வாழ்வதும்

சிறை இல்லாமல் சிறை ஆவதும்
சிறைக்குள்ளேயே விடுதலை ஆவதும்

பிணம் இல்லாமல் கிரிகை செய்வதும்
இறுதி வரை பிணமாக இருப்பதும்

கண்கள் இல்லாமலே கண்ணீர் விடுவதும்
கண்ணீர் வற்றிய கண்ங்கள் இருப்பதும்

உணர்வில்லாமல் ஊமையாவதும்
ஊமையே உணர்வாவதும்

வன்னி மண்ணில்

அல்லது

தமிழ் இனத்தில்

அல்லது

மேற்கூறிய இரண்டிலும்

6/12/2011

உன்னையே நீ மறந்திடுவாய்


தடாகத்து தாமரையோ
தரணியில் பூத்த தேவதையோ
தங்கத்தில் கடைந்தெடுத்த
தளததளக்கும் பெண்தானோ

காதல் ரசம் சொட்டுகின்ற
கண்களில் காமம் இல்லை
தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை

நீர் எடுத்து ஆடி வந்தால்
குளிர்கின்ற பூந்தளிர்
நெஞ்சோடு அணைத்தெடுத்து
முத்தம் தரும் சுவை தனி

பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்
வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்

பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்
உயிர் தேடும் நினைப்பினிலே
உன்னையே நீ மறந்திடுவாய்

6/05/2011

கடல் மடியில் உயிர் வாடும்


நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்

நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்