அறுகம்புல் நுனியிலே
அழகாய் விழுந்த பனித்துளியே
உலகெரிக்கும் தணல் கொண்டு
வருகின்றான் சூரியனே
மெதுவாக கரைந்தோடு
இலையினிலே வழிந்தோடு – எம்
மனதுக்குள் உள்வந்து
கண்ணீராய் நீ மாறு
உச்சத்தில் இருப்பவர்கள்
உண்மைகளை அறிவதில்லை
கட்டாந்தரையில் இருக்கின்றோம்
கவலை சொல்கிறோம் நீ கேளு
சூரியனால் கருகுகின்றோம்
மழைவந்தால் நனைகின்றோம்
வெள்ளத்தில் அழுகிகின்றோம்
கரையான்களால் அழிகின்றோம்
குப்பை என்று எமைக்கொன்று
நெருப்புவைக்க சாகின்றோம்
பிறந்த இடம் பிழையா
பிறந்த இனம் பிழையா
வளர்ந்த முறை பிழையா
வாழ்வு நமக்கில்லையா
காற்றில் நாம் ஆடினோம்
நிமிர்ந்தே நாம் பாடினோம்
தனியாக வளராமல்
இனமாக நாம் படர்ந்தோம்
அழிந்தாலும் இனமானோம்
அழிய அழிய துளிர்கொண்டோம்
விடியலுக்காய் விழுதானோம்
விடியும் வரை உயிர்வாழ்வோம்
வடிவங்கள் மாறினாலும்
மரபனுக்கள் மாறவில்லை
எமக்கான எம்நிலத்தில் – நாளை
துளிர்க்காமல் விடமாட்டோம்
Tweet | |||||