12/08/2014

தொட்டு உன்னை எழுப்புவேன்


காலையில் கதிரவன்
எழ முன்பே
கண்முளிப்பேன்
உன் முகம் முன்பே


கண்கள் மூடிய
உன்முகத்தை
நெஞ்சில் பதித்துவிட்டு
சொண்டில் சிரிப்புடன் செல்வேன்


காலை தேநீரை கையிலெடுத்து
சேலை தலைப்பால் பொத்திவைத்து
கட்டிலருகே வந்து நின்று
தொட்டு உன்னை எழுப்புவேன்


கண்கள் முழித்து எழும்பி
என்னை பார்த்து சிரித்து
எந்தன் கையால் தேநீர்வாங்கி
எனக்கே நீ பருக்கிவிடுவாய்


இந்த தருணம் ஒவ்வொருநாளும்
கிடைக்கவேண்டும் என்றெண்ணி
கடவுள்முன் கைகூப்பி
கலங்கி மன்றாடி நிக்கிறேன்



12/05/2014

அழியாது தமிழின் ஈரம்



எலும்புகள் பொருத்தபட்ட
விலங்கிலும் கேவலமான
உருவங்கள்

மூச்சு விட முயற்சித்தாலும்
துப்பாக்கி முனையில் விசாரிக்கும்
சுதந்திரம்

வீடிருக்கு வேலியிருக்கு
வீட்டுக்குள்ளே யாருமில்லா
குடும்பங்கள்

ஊணமாக்கி முடமாக்கி
ஊர்க்காவலை பலமாக்கும்
ஆட்சியாளர்

உருக்குலைந்த பூமியினை
உக்கிரமாய் காவல்காத்து
அர்த்தம் என்ன

அண்ணனின் பெயருக்கே
அரைவாசி நிதி ஒதுக்கும்
அரசாங்கம்

என்னத்தை சாதித்தாலும்
என்றைக்கும் அழியாது
தமிழின் ஈரம்

12/01/2014

உறவுக்கு பெயர்தான் காதலே


வீசுதே தென்றல் வீசுதே
வாசலில் அவள் பொன்முகம்
கூசுதே கண்கள் கூசுதே
அவள் பார்வையில் – என் இரு கண்களே

வயலோரம் ஒன்றாய் திரிந்தோம்
வயதாகியும் பிரியா நின்றோம்
இளவட்டம் ஆன பின்பும்
இணைந்தேதான் கதைகள் சொன்னோம்

குழலோடு பீ பீ செய்து
குயிலுக்கு பாட்டு தந்து
விரலோடு விரல்கள் கோர்த்து
விளையாடி திரிந்து வந்தோம்

நாணம் கொள்ளும் அழகையும்
வெட்கம் கொள்ளும் விதத்தையும்
கற்றுக்கொண்டால் என்னிடம்
நான் சொக்கி நின்றேன் பெண்ணிடம்

பேசும் போது அழகுதான் – அவள்
பேசா நின்றால் அழுகைதான்
வேசமில்லா விருப்பத்தை
வெட்கமின்றியே சொல்கிறாள்

தோளோடு தோள் சாயவில்லை
தேகங்கள் இன்னும் முட்டவில்லை
காதோடு ஓடி வந்து
காதலென்று சொல்கிறாள்

ஒன்றாக ஊர் சுற்றினாலும்
உன்னோடு மட்டும்தானே
என்னோடு நீ வந்தாலென்ன – இந்த
உறவுக்கு பெயர்தான் காதலே